சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஊழியர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் ஊழியர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை

1 mins read
c09934f5-a17c-4349-af27-9bef0b6fd78e
விதிமுறை மாற்றம் ஜூன் முதல் தேதி நடப்புக்கு வருகிறது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஸ்கூட் விமானங்களில் பணிபுரியும் விமானிகள், ஊழியர்கள் இனி முகக்கவசம் அணியவேண்டும் என்பது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் வியாழக்கிழமை முதல் இந்த விதிமுறை மாற்றம் நடப்புக்கு வருகிறது.

எனினும், கட்டாய முகக்கவச விதிமுறை இருக்கும் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது விமான ஊழியர்கள் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்.

இந்த விதிமுறை மாற்றம் குறித்து சில விமான ஊழியர்கள் கவலைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஐஏ, ஸ்கூட் ஊழியர்கள் சீருடையில் இருக்கும்போது முகக்கவசம் அணியக்கூடாது; இக்குறிப்பைக் கொண்ட கடிதம் எஸ்ஐஏ குழுமத்தின் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டது.

அக்கடிதத்தின் படங்கள் சீன நாளிதழான சாவ்பாவுடன் பகிரப்பட்டன.

அப்படியென்றால் சீருடையில் இருக்கும்போது முகக்கவசம் அணியாமல் இருப்பது கட்டாயம் என்பதே தங்களுக்கு வந்த தகவல் என்று சில ஸ்கூட், எஸ்ஐஏ ஊழியர்கள் குறிப்பிட்டனர்.

கொவிட்-19 கிருமிப் பரவலின் தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கட்டாய முகக்கவச விதிமுறையை விலக்குவதாக எஸ்ஐஏ குழுமம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.