எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பிறகு காணாமற்போன சிங்கப்பூரரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியாளர்கள் கூடுமானவரை முயன்றும் தனது கணவர் ஸ்ரீனிவாஸ் சைனிஸ் தத்தாத்ரேயாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சுஷ்மா சோமா இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.
தனது கணவர், அச்சமின்றி முழுமையாக மனநிறைவடையும் வகையில் வாழ்ந்தார் என்று 36 வயது இசைக் கலைஞரான திருவாட்டி சுஷ்மா தனது பதிவில் கூறினார்.
ஆழ்கடல், உலகின் ஆக உயரமான மலைகள் ஆகியவற்றுக்கு 39 வயது ஸ்ரீனிவாஸ் சென்று வந்துள்ளதாகவும் அவர் சொன்னார்.
இப்போது தனக்கு ஆகப் பிரியமான மலைகளில் திரு ஸ்ரீனிவாஸ் இருப்பதாக திருவாட்டி சுஷ்மா கூறினார்.
ஆதரவு வழங்கிய வெளியுறவு அமைச்சோடு மலையேறி வழிகாட்டிகள் (ஷர்ப்பாஸ்), நண்பர்கள், குடும்பத்தார் ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மே மாதம் 19ஆம் தேதியன்று திரு ஸ்ரீனிவாஸ் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.
ஆனால், 'ஹேஸ்' எனப்படும் மலையேறும்போது ஏற்படும் நோய்க்கு ஆளானதால் தான் மலையிலிருந்து இறங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.