உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தானியக்க முறையால் பெரிதும் பலனடையும் பேருந்துப் பயணிகள்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தானியக்க முறையால் பெரிதும் பலனடையும் பேருந்துப் பயணிகள்

1 mins read
a11a6fda-8a8b-40ee-a126-7f5c9bb043f8
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் தானியக்க முறை செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாலை உச்ச நேரங்களில் பயணிகள் விரைவில் குடிநுழைவுச் சோதனைகளை முடிக்கின்றனர்.

மாலை உச்ச நேரத்தில் இப்போது ஒரு மணிநேரத்துக்குக் கூடுதலாக 1,000 பயணிகள் குடிநுழைவுச் சோதனைகளை முடிக்கின்றனர்.

பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு இது பொருந்தும்.

இந்த எண்ணிக்கை, கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்கு முன்பு 2019ஆம் ஆண்டில் பதிவானதில் 20 விழுக்காடு அதிகம் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் சனிக்கிழமையன்று தெரிவித்தது.

மே மாதம் 27ஆம் தேதி, இவ்வாண்டின் ஜூன் பள்ளி விடுமுறையின் முதல் நாளாகும்.

பொதுவாக இந்த காலகட்டத்தில் கூடுதலான பயணிகள் மலேசியாவுக்குச் சென்று வருவதுண்டு.

சிங்கப்பூரின் நில எல்லைகளில் இருக்கும் பேருந்து முனையங்கள் தானியக்க சோதனை முறையை மையமாகக் கொண்டு இயங்குவதாகக் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் குறிப்பிட்டது.

கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் நடப்பில் இருந்த பயணக் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதிலிருந்து சிங்கப்பூர்-மலேசிய நில எல்லைகளில் போக்குவரத்து பெரிய அளவில் இருந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் புனித வெள்ளிக்கிழமை வார இறுதியில் மட்டும் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் பயணிகள் நில எல்லைகளைக் கடந்தனர்.