சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடத் தான் தயார் என்று சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் (பிஎஸ்பி) நிறுவியவரும் தலைவரான டாக்டர் டான் செங் போக் அறிவித்துள்ளார்.
வெள்ளிக்ழமையன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.
''ஏற்புடைய நிலையில் இருக்கும்வரை நான் களத்தில் இருப்பேன். போட்டியிலிருந்து ஒருபோதும் பின்வாங்கி ஓடமாட்டேன். இதைத்தான் எப்போதும் நான் சொல்லி வருகிறேன்.
''2025ல் நடக்கும் தேர்தல் மிகச் சவாலானதாக இருக்கும். இதுவரை அந்தத் தேர்தலுக்கு மிகவும் தயாராக நான் இருக்கிறேன்,'' என்று 83 வயது டாக்டர் டான் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தல் 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் நடைபெறவேண்டும்.
2021ல் பிஎஸ்பி கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து டாக்டர் டான் விலகிக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அவர் பொது இடங்களில் அவ்வளவாகத் தென்பட்டதில்லை.
டாக்டர் டான் 2020ஆம் ஆண்டில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிட்டார்.
மக்கள் செயல் கட்சி குழுவிடம் தோல்வியடைந்தார்.
பிஎஸ்பியின் அடுத்த தேர்தலுக்கான இலக்குகள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டன.
கட்சியின் புதிய மத்திய செயற்குழு இவ்வாண்டு மார்ச் மாதம் அமைந்தது.
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் லியோங் மன் வாய், 64, கட்சியின் தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
எதிர்க்கட்சிகளைத் திரட்டி கூட்டணி ஒன்றை அமைக்கத் தன் கட்சி வசதிகளை ஏற்படுத்தித் தரும் என்று வெள்ளிக்கிழமையன்று திரு லியோங் கூறினார்.

