புக்கிட் தீமா வனம்-மேற்கு நீர்த்தேக்க வட்டாரத்திற்கிடையே விலங்குகள், மக்கள் கடக்கலாம்
அப்பர் புக்கிட் தீமா ரோடு குறுக்கே 2026ஆம் ஆண்டு வாக்கில் புதிய பாலம் கட்டப்படும். புக்கிட் தீமா காட்டிற்கும் மேற்கு நீர்த்தேக்க வட்டாரத்திற்கும் இடையில் புக்கிட் தீமா வனப் பகுதி வழியாக மக்களும் வனவிலங்குகளும் கடந்து சென்றுவர அந்தப் பாலம் அனுமதிக்கும்.
அப்பர் புக்கிட் தீமா ரோட்டை விலங்குகள் கடந்து செல்கின்றன. அப்படி செல்லும்போது அவை வாகனங்களில் அடிபட்டுவிடுகின்றன என்பதை தேசிய பூங்காக் கழகம் தெரிவித்து வந்துள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அந்தச் சுற்றுச்சூழல் பாலம் கட்டப்படுகிறது. பசுமை வளங்களுக்கு இடையே பாதுகாப்பான முறையில் விலங்குகள் சென்று வரவும் அவற்றின் வாழ்விடச் சூழல் விரிவடையவும் அந்தப் பாலம் உதவும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று நடந்த உயிரியல் பன்மய விழாவில் அந்தப் பாலம் பற்றி அறிவித்தார்.
புக்கிட் தீமா இயற்கை காடு, புக்கிட் தீமா வனப் பகுதி ஆகியவற்றில் 1,250க்கும் மேற்பட்ட சிற்றினங்களைச் சேர்ந்த தாவரங்களும் 1,800க்கும் மேற்பட்ட சிற்றினங்களைச் சேர்ந்த விலங்குகளும் வாழ்கின்றன என்பதைத் திரு லீ சுட்டிக்காட்டினார்.
புக்கிட் தீமா வனப் பகுதியை யும் மத்திய நீர்த்தேக்க வனப் பகுதியையும் இணைப்பதில் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் உள்ள பாலம் வெற்றிகரமான முறையில் உதவி வருகிறது. அதைத் தொடர்ந்து இப்போது புதிய பாலம் அமைக்கப்படுகிறது.
புக்கிட் தீமா விரைவுச்சாலை சுற்றுச்சூழல் பாலம் 2013ல் கட்டி முடிக்கப்பட்டது. அந்த விரைவுச்சாலை பிரிக்கும் இரண்டு வனப் பகுதிகளையும் அந்தப் பாலம் இணைக்கிறது.
அந்தப் பாலத்தைச் சூழ்ந்தபடி தாவரங்கள் அடர்த்தியாக வளர்ந்து இருப்பதால் பல உயிரினங்கள் அந்தப் பாலத்தில்கூட உயிர் வாழ்கின்றன என்று அமைச்சர் தெரிவித்தார்.
பசுமை இடங்களின் சுற்றுச்சூழல் தன்மை பற்றியும் இயற்கை வள இணைப்பைப் பலப்படுத்துவதில் அவற்றின் பங்கு பற்றியும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவும் வகையில் சென்ற ஆண்டு நாடளாவிய முயற்சி ஒன்று முடிவடைந்தது.
அந்த நடவடிக்கை மூலம் தெரியவந்தவை, அத்தகைய வனப் பகுதிகளுக்கு இடையில் சுற்றுச்சூழல் வழிகளை அமைக்க உதவுகின்றன என்றார் அவர்.

