சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஸ்கூட் நிறுவனங்களின் விமானங்களில் பணிபுரியும் விமானிகள், ஊழியர்கள் ஜூன் 1ஆம் தேதி முதல் முகக்கவசம் அணியவேண்டிய அவசியம் இல்லை.
இருந்தாலும் அது கட்டாயமான ஒன்றாக ஆவது குறித்து சில விமான ஊழியர்கள் கவலையடைகிறார்கள்.
ஒரே மாதிரியான, முரணற்ற அணுகுமுறையை எஸ்ஐஏ குழுமம் கடைப்பிடிக்கிறது. சீருடையில் இருக்கும்போது ஊழியர்கள் முகக்கவசத்தை அணியக் கூடாது என்று அந்த இரண்டு விமான நிறுவனங்களும் அனுப்பிய அறிவிப்பு தெரிவித்தது.
இருந்தாலும் விமானம் ஓரிடத்தைவிட்டு புறப்படும்போது அல்லது அந்த இடத்திற்குச் செல்லும்போது அங்கு முகக்கவசம் கட்டாயம் என்றால், அந்த இடத்தைச் சேர்ந்த அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப ஊழியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குழுமத்தின் கடிதத்தைக் காட்டும் படம் சாவ்பாவ் நாளிதழுக்கு அனுப்பப்பட்டது.
எஸ்ஐஏ, ஸ்கூட் விமான ஊழியர்கள் சீருடையில் இருக்கும்போது முகக்கவசத்தை அகற்றிவிட வேண்டும் என்பது வரும் ஜூன் முதல் கட்டாயமாகிறது என்ற முடிவுக்குத் தன் ஊழியர் ஒருவர் வந்ததாக ஸ்கூட் நிறுவனத்தின் விமான ஊழியர் ஒருவர் மின்னஞ்சல் பேட்டியில் அந்தச் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
இது பற்றி கருத்து கூறிய எஸ்ஐஏ விமான ஊழியர், புதிய நிபந்தனையை தான் ஆட்சேபிக்கவில்லை என்றார்.
இருந்தாலும் தன் சக ஊழியர்களில் சிலர் இது பற்றிக் கவலை தெரிவித்து இருப்பதாகவும் தாங்கள் விரும்பினால் முகக்கவசத்தை அணியலாம் என்று அவர்கள் நம்புவதாகவும் அந்த ஊழியர் தெரிவித்தார்.
இதனிடையே, இதுபற்றி கேட்டபோது அரசாங்கத்தின் புதிய நியதிகளுக்கு ஏற்ப முகக்கவச நிபந்தனையை ஜூன் 1ஆம் தேதி முதல் தன் விமான ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய தேவை இராது என்று எஸ்ஐஏ குழுமம் உறுதிப்படுத்தியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
இவ்வேளையில், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் பேசிய எஸ்ஐஏ ஊழியர் சங்கத் தலைவர் ஆலன் டான், ஊழியர்கள் சிலரின் கவலை பற்றி உரிய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தி இருப்பதாகவும் முகக்கவசம் தேவையில்லை என்ற நிபந்தனையைப் பின்பற்ற வேண்டும் என்று நிறுவனம் கட்டாயப்படுத்தாது என்று தங்களிடம் உறுதி கூறப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

