அனுஷா செல்வமணி
மார்பகப் புற்றுநோய் இருப்பதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால் சிகிச்சை நாடி நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ முடியும். இதை வலியுறுத்தும் வகையில் வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம், 'வடகிழக்குப் புற்றுநோய் வீரர்களுக்கு ஆதரவு' எனும் திட்டத்தைப் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மாதருக்கு நிதி ஆதரவும் மனநல ஆதரவும் வழங்கும்.
மாதர் ஆரோக்கியத்திற்கான அனைத்துலக தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 'ஷி மேட்டர்ஸ்: ஆக்ஷன் ஃபார் வுமன்ஸ் ஹெல்த்' என்ற நிகழ்வில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
செங்காங் சமூக மன்றத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
சிங்ஹெல்த், சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியவை வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றத்துடன் கைகோர்த்து வடகிழக்கு வட்டாரத்தில் வசிக்கும் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாதருக்கு இலவச 'மெமோகிராம்' பரிசோதனைச் சேவையை வழங்கவுள்ளன. மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்டோருக்கு $10,000 வரையிலான நிதி உதவியும் வழங்கப்படும்.
"பெற்றோர், மனைவி, பராமரிப்பாளர், ஊழியர் எனப் பல பரிமாணங்களை எடுக்கும் ஒரு பெண், தனது சுகாதாரத்தை எவ்வேளையிலும் கவனித்துக்கொள்ள வேண்டும். மாதரை அதிகம் பாதிக்கும் மார்பகப் புற்றுநோயை எதிர்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வு பாராட்டிற்குரியது. மார்பகப் புற்றுநோய் மட்டுமின்றி இதர புற்றுநோய்கள் தொடர்பான சுகாதாரப் பரிசோதனைகளைச் செய்துகொள்ளவும் மாதர் ஊக்குவிக்கப்படுகின்றனர்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த கிட்டத்தட்ட 400 குடியிருப்பாளர்கள் சுகாதார நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர். மார்பகப் புற்றுநோய் பரிசோதனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் குழுக் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது. குடியிருப்பாளர்களுக்கு மார்பகப் புற்றுநோய் சார்ந்த விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் தகவல் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
51 ஆண்டுகளாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் மார்பகம் தொடர்பான பிரிவில் தாதியாகப் பணிபுரியும் 71 வயது நாகலிங்கம் சரஸ்வதி, "பெண்கள் எவ்வாறு தாங்களே மார்பகத்தில் கட்டி இருப்பதைப் பரிசோதித்துக்கொள்ளலாம் என்பதை சிங்ஹெல்த் சாவடியில் இருந்த நானும் என் தொண்டூழியர்களும் கற்றுத் தருகிறோம்," என்றார்.
மெமோகிராம் பரிசோதனையைச் செய்துகொண்டவர்களில் ஒருவரான பகுதிநேர ஊழியர் அப்துல் காதர் நூர் உல் ஆயிஷா, 52, "நான் 2017ல் எனது முதல் மெமோகிராம் பரிசோதனையை மேற்கொண்டேன். அதன் பிறகு இன்றுதான் செய்கிறேன். எனது உறவினரும் நண்பரும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 வயதுக்கு மேற்பட்ட மாதர் கட்டாயம் நோய் வரும் முன் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும். இந்தத் திட்டம் என்னைப் போன்றவர்களுக்கு பேருதவியாக இருக்கும். இனி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மெமோகிராம் பரிசோதனைக்குச் செல்ல முடிவெடுத்துள்ளேன்," என்றார்.
பொதுமக்களுக்கு ஆரோக்கிய வாழ்க்கைமுறையைப் பின்பற்றும் அவசியத்தைக் கொண்டு சேர்க்கும் விதமாக இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கமும் நிகழ்வில் பங்கேற்றது. அதன் வடகிழக்குப் பிரிவின் தலைவரான இம்ரானா பானு, 37, "நாங்கள் ஆரோக்கியத்தின் அவசியத்தைப் பறைசாற்றும் விதமாக 12 மாதத் திட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதன் தொடக்க நாளாகவும் இன்று அமைந்துள்ளது," என்று பகிர்ந்தார்.