மத்திய சேமநிதி உறுப்பினர்களின் சிறப்பு, மெடிசேவ் கணக்குகளின் வட்டி விகிதம், ஜூலை 1க்கும் செப்டம்பர் 30க்கும் இடைப்பட்ட காலத்திற்கு ஆண்டுக்கு 4.01 விழுக்காடு அதிகரிக்கும். தற்போதைய 4 விழுக்காட்டைக் காட்டிலும் இது அதிகம்.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் 10 ஆண்டுகால முறிகளில் பதிவான 12 மாத அதிகரிப்பே அதற்குக் காரணம் என்று மத்திய சேமநிதிக் கழகமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் நேற்று கூட்டு அறிக்கையில் தெரிவித்தன.
2008ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு, மெடிசேவ், ஓய்வுக்காலக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் 4 விழுக்காடாக இருந்து வந்துள்ளது. அப்போதிலிருந்து சிறப்பு, மேடிசேவ் கணக்குகளின் வட்டி விகிதம் தற்போது அதிகரிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. அதேநேரத்தில், சாதாரணக் கணக்கிற்கும் ஓய்வுக்காலக் கணக்கிற்குமான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.
சாதாரணக் கணக்கிற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2.5 விழுக்காடாக உள்ளது.
ஓய்வுக்காலக் கணக்கிற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4 விழுக்காடாக இருக்கிறது.
55 வயதிற்குட்பட்ட மசேநி உறுப்பினர்கள் மசேநிதியின் மொத்த இருப்பின் முதல் $60,000 தொகைக்கு ஆண்டுக்கு கூடுதலாக 1 விழுக்காடு வட்டியைப் பெறுவார்கள். இதில் சாதாரணக் கணக்கில் அதிகபட்சம் $20,000 வரைக்கும் இந்த வட்டி கிடைக்கும்.
55 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தங்கள் கணக்கில் அதிக வட்டியைப் பெறுவார்கள். இவ்வயதுப் பிரிவினர் மசேநிதியின் மொத்த இருப்பின் முதல் $30,000 தொகைக்கு ஆண்டுக்கு கூடுதலாக 2 விழுக்காடு வட்டியைப் பெறுவார்கள். இதில் சாதாரணக் கணக்கில் அதிகபட்சம் $20,000 வரைக்கும் இந்த வட்டி கிடைக்கும்.
மொத்த இருப்பின் அடுத்த $30,000 தொகைக்கு ஆண்டுக்கு கூடுதலாக 1 விழுக்காடு வட்டியைப் பெறுவார்கள்.
வீவக வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதமும் இந்த காலகட்டத்தில் மாறாமல் ஆண்டுக்கு 2.6 விழுக்காடாக இருக்கும்.

