நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு உற்பத்தித் திறனைப் பெருக்குகிறது 'எஸ்ஐஏ இஞ்சினியரிங்' நிறுவனம்
சாங்கி விமான நிலையத்தில் பணிபுரியும் 'எஸ்ஐஏ இஞ்சினியரிங்' நிறுவன ஊழியர்கள் இனி விமான இயந்திரங்களைத் தாங்களே சோதனையிடத் தேவையில்லை.
இயந்திர மனிதக் கருவிகள் அந்த வேலையைச் செய்யத் தயாராகிவிட்டன.
நிறுவனம் அதன் போட்டித்தன்மையையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளும் புதிய உருமாற்றத் திட்டத்தின் ஓர் அங்கமாக அதுகுறித்து அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்பிலான நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று கலந்துகொண்டார்.
இயந்திர மனிதக் கருவி ஒரு விமான இயந்திரத்தைச் சோதனையிடும்போது சராசரியாக 150 படங்களை எடுக்கும்.
வழக்கமாக தொழில் நுட்பர்களால் எட்ட முடியாத பாகங்களையும் அது விரைந்து படமெடுக்கும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக விமான இயந்திரத்தில் பழுதுகள் ஏதும் இருந்தால் அவற்றைத் துல்லியமாகக் கண்டறிய அந்த இயந்திர மனிதக் கருவி உதவும்.
மேலும், விமான இருக்கைகள் நிறுவப்படும் விமானத்தின் தரைப்பகுதியைச் சோதனையிடும் இயந்திர மனிதக் கருவியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முப்பட்டைக் கண்ணாடி வில்லை மூலம் இருக்கைகள் நிறுவப்படும் பகுதியைச் சோதனையிட அது கைகொடுக்கும்.
சோதனையின்போது படமெடுத்து அதனை வருங்காலப் பயன்பாட்டுக்காகச் சேமித்து வைக்கும் வசதியும் உண்டு.
இவ்விரு இயந்திர மனிதக் கருவிகளும் ஓர் ஆண்டில் ஏறக்குறைய 780 மணி வேலை நேரத்தைக் குறைக்க உதவும் என்று கருதப்படுகிறது. விமானத்தை இழுத்துச்செல்ல நேரிடுகையில் மோதலைத் தவிர்க்க உதவும் கட்டமைப்பும் நிறுவப்பட்டுள்ளது.