சிங்கப்பூர் சுங்கத் துறை, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகள் சாங்கி விமான நிலையத்தில் மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கையில் சுங்க, வரி ஏய்ப்பு செய்த 115 பயணிகள் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை அந்தக் கூட்டு அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆடம்பர கைப்பைகள், சிகரெட்டுகள், புகையிலைப் பொருள்கள், சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான மதுபானங்கள், பொருள், சேவை வரி செலுத்த வேண்டிய பொருள்கள் ஆகியவை பிடிபட்டன.
அவற்றின் மூலம் ஏய்க்கப்பட்ட வரிகளின் மதிப்பு $18,491 என்று கூறப்பட்டது.
பிடிபட்டோருக்கு மொத்தம் $28,000 அபராதம் விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் ஐந்து ஆடம்பரக் கைப்பைகளுடன் பிடிபட்டார்.
வெளிநாட்டில் அவரும் அவரது காதலியும் வாங்கிய அப்பைகளின் மதிப்பு $13,825. அவற்றுக்குச் செலுத்தப்படவேண்டிய பொருள், சேவை வரி $1,106ஐ ஆடவர் ஏமாற்ற முயன்றார்.
சிங்கப்பூர் மாது ஒருவர் ஆடம்பரக் கைக்கடிகாரத்துடனும் ஆடம்பரக் கைப்பையுடனும் பிடிபட்டார். மொத்தம் $5,637 மதிப்பிலான அவற்றுக்கு அவர் செலுத்தவேண்டிய பொருள், சேவை வரி $450.96.
பிறந்தநாள் பரிசுப் பொட்டல உறைக்குள் ஆறு பொட்டலங்கள் கள்ள சிகரெட்டுகளை மறைத்துக் கொண்டுவந்த வெளிநாட்டு ஆடவர் ஒருவர் பிடிபட்டார்.
வேலை அனுமதி அட்டை வைத்துள்ள வெளிநாட்டு ஆடவர் 'கஸ்டம்ஸ்@எஸ்ஜி' செயலி வழியாக விஸ்கி போத்தல் குறித்துத் தவறான தகவல் அளித்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்மூலம் $15.14 சுங்க வரியைத் தவிர்ப்பது அவரது நோக்கம்.
சிங்கப்பூருக்கு வரும் அனைத்துப் பயணிகளும் வரி செலுத்த வேண்டிய பொருள்கள் குறித்து துல்லியமான, முழுமையான தகவல்களை அளிக்க வேண்டியது அவர்களின் பொறுப்பு என்று சிங்கப்பூர் சுங்கத் துறை கூறியது.
"வரி ஏய்ப்பு செய்வது குற்றமாகும். அவ்வாறு செய்யும் பயணிகள் கூடுதலான அபராதத் தொகையை செலுத்த நேரிடும்," என்று அது எச்சரித்தது.
சுங்கவரிச் சட்டத்தின்கீழ் வரி ஏய்ப்பு செய்ததோ செய்ய முயன்றதோ நிரூபிக்கப்பட்டால், ஏய்க்கப்பட்ட வரியைப்போல 20 மடங்குத் தொகையை அபராதமாகச் செலுத்த நேரிடும்.
அல்லது ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும்.