'பிகட்ரான் சர்விஸ் சிங்கப்பூர்' எனும் நிறுவனத்தில் பணியாற்றிய லிம் ஜென் ஹீ எனும் ஆடவர் (படம்), பழுதான 25,000 'ஐஃபோன்'களைக் கையாடியதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதனால் நிறுவனத்திற்கு $6.76 மில்லியன் இழப்பு ஏற்பட்டது. நிறுவனம் சிங்கப்பூரிலும் மற்ற ஆசிய நாடுகளிலும் 'ஐஃபோன்' பழுது நீக்கும் சேவையை வழங்கி வந்தது.
அதில் உதவி மேலாளராகப் பணியாற்றிய மலேசியரான 51 வயது லிம், தளவாட மேலாளரான இங் ஷு கியான் எனும் மாதுடன் சேர்ந்து அவ்வாறு கையாடல் செய்தார்.
2018ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்கும் 2019ஆம் ஆண்டு மே 15ஆம் தேதிக்கும் இடையில் கையாடல் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பழுது பார்த்த 'ஐஃபோன்களை' மலேசியாவில் விற்று லிம், இங் இருவரும் லாபத்தைப் பிரித்துக்கொண்டனர்.
ஆப்பிள் நிறுவனத் தணிக்கையாளர்கள் நடத்திய திடீர்ச் சோதனையில் 'ஐஃபோன்கள்' காணாமற்போனது கண்டுபிடிக்கப்பட்டது.
கையாடல் மூலம் லிம் $3 மி. ஈட்டியதாகவும் இங் $3.1 மில்லியனுக்குமேல் ஈட்டியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இங் தன்மீது சுமத்தப்பட்ட நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகள் இரண்டையும் ஒப்புக்கொண்டதை அடுத்து 2021ல் அவருக்கு ஒன்பது ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
லிம்மிற்கு ஜூலை மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

