சட்டவிரோத சூதாட்டம் தொடர்பில் மூவர் கைது; $2,698 பறிமுதல்
சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது. அவர்கள் 57 வயதுக்கும் 66 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அங் மோ கியோ அவென்யூ 4ல் சென்ற சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்படும் கருவிகளையும் $2,968 ரொக்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணை தொடர்வதாகக் கூறப்பட்டது.
உரிமம் இன்றி சூதாட்டச் சேவை வழங்கியது நிரூபிக்கப்பட்டால் $10,000 வரையிலான அபராதமோ ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கருதுவதாகவும் அவற்றில் ஈடுபடுவோர்மீது அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என்றும் காவல்துறை கூறியது.
தங்கையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய பதின்ம வயது இளையர்
தங்கையை இருமுறை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளை 17 வயது இளையர் நேற்று ஒப்புக்கொண்டார்.
2020ஆம் ஆண்டு முதல்முறை அவர் அவ்வாறு நடந்துகொண்ட சிறுமிக்கு எட்டு வயது.
பின்னர் சென்ற ஆண்டும் இளையர் தங்கையிடம் தவறாக நடந்துகொள்ள முற்பட்டபோது தாயார் வந்துவிடவே தங்கைக்கு வலி ஏற்பட்டதைச் சோதிக்க உதவியதாகக் கூறினார். ஆனால் முதல் சம்பவம் குறித்துத் தன் நண்பர்களிடம் இளையர் கூறியிருந்ததால் நண்பர் மூலம் ஆசிரியருக்கும் பள்ளி முதல்வருக்கும் அதுகுறித்துத் தெரியவந்தது.
பள்ளி முதல்வர் பெற்றோரிடம் தகவல் அளித்ததைத் தொடர்ந்து இளையரின் தந்தை காவல்துறையில் புகாரளித்தார்.
நன்னடத்தைக் கண்காணிப்பு, சீர்திருத்தப் பயிற்சி ஆகியவற்றுக்கு இளையர் தகுதி பெறுவாரா என்று மதிப்பீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு அடுத்த மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

