தங்ளின், சாங்கி விமான நிலையம், பீஷான் ஆகிய இடங்களில் உள்ள மைண்ட் சாம்ஸ் பாலர் பள்ளிகளில் நான்கு குழந்தைகள் குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
'நோஷ் குயிசின்' எனும் உணவு தயாரிக்கும் நிறுவனத்தின் உணவை மே 17ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை உட்கொண்ட 79 பிள்ளைகள், 10 ஊழியர்கள் என மொத்தம் 89 பேர் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் உணவு அமைப்பு, ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பு ஆகியவை நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் நிலைமை சீராக உள்ளது. பாதிக்கப்பட்ட மற்ற சிலர் வெளிநோயாளி சிகிச்சை, சுயமருத்துவம் பெற்றுக்கொண்டனர். சிலர் சிகிச்சை ஏதுமின்றி குணமடைந்துள்ளனர் என்று அந்த அமைப்புகள் கூறின.
தங்ளின் பாலர்பள்ளியில் 45 பிள்ளைகளும் ஐந்து ஆசிரியர்களும் சாங்கி விமான நிலையப் பாலர்பள்ளியில் 28 பிள்ளைகளும் ஐந்து ஊழியர்களும் பீஷான் பள்ளியில் ஆறு பிள்ளைகளும் பாதிக்கப்பட்டனர்.
'நோஷ் குயிசின்' உணவு வர்த்தகம் நேற்று முதல் அடுத்த அறிவிப்பு வரும்வரை தடை செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனம் தனது இடங்களைச் சுத்தப்படுத்தி, கிருமிநாசினி தெளித்து, அது பயன்படுத்தும் தட்டுகள், சமையல் உபகரணங்கள் ஆகியவற்றைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் உணவு தயாரிப்பு ஊழியர்களும் நியமிக்கப்பட்ட உணவுச் சுகாதார அதிகாரியும் வேலைக்குத் திரும்புதற்கு முன் உணவுப் பாதுகாப்புப் பயிற்சிக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.