சிங்கப்பூர் இளையர்கள் அண்மைக் காலமாக, நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும் காயங்களால் அவதிப்படுகின்றனர். பெரும்பாலான காயங்கள் அவர்கள் விளையாடும்போது ஏற்படுகிறது.
19 வயது ஈதன் சோங்கிற்கு காற்பந்துப் பயிற்சியின்போது தோள்பட்டையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
பந்தை உதைக்கப் பாய்ந்தபோது கீழே விழுந்தார்.
தன்னுடைய கையை அவரால் உயர்த்த முடியவில்லை. பயிற்சி முடிந்ததும் மருத்துவ நிபுணரைக் காண விபத்து, மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்றார்.
"எனக்கு தோள்பட்டை மூட்டு விலகல் எதிர்காலத்தில் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி ஏற்பட்டால் என்னுடைய தசை நார் கிழிந்துவிடும் என்றும் என் தோள்பட்டை மிக எளிதாக விலகும் என்றும் மருத்துவர் கூறினார்," என்று விவரித்தார்.
திரு சோங் போன்று சிங்கப்பூரில் பல இளையர்கள் விளையாட்டுத் தொடர்பான காயங்களால் அவதிப்படுகின்றனர்.
இந்தக் காயங்கள் எலும்பு முறிவுகளிலிருந்து மூட்டு விலகல் முதல் மூளையதிர்ச்சிகள் வரை, பல காயங்கள் விளையாட்டுப் பயிற்சி அல்லது பிற உடல் செயல்பாடுகளின்போது அடிக்கடி ஏற்படுகின்றன.
இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் எலும்பியல் அறுவை சிகிச்சை துறையின் தலைவராக இருக்கும் டாக்டர் ஹான் ஃபுகாய் இதுபற்றி கூறும் போது, "கொவிட்-19க்குப் பிறகு இளையர்கள் அதிகமாக விளையாட்டால் ஏற்படும் காயங்களுக்காக மருத்துவமனைக்கு வருகின்றனர்.
"இந்தக் காயங்களுடன் வாரத்திற்கு 50 இளையர்கள் வருகிறார்கள். இது கொவிட்-19க்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் 50 விழுக்காடு அதிகம். நீண்ட காலம் கொவிட்-19 முடக்கத்தால் செயலற்று இருந்தார்கள்.
"இப்பொழுது ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அதனால் அடிக்கடி காயம் அடைகிறார்கள்," என்று டாக்டர் ஹான் கூறினார்.

