இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் மறுவிற்பனை மூலம் குறைவான கூட்டுரிமை வீடுகளே கைமாறியதாக 99.co மற்றும் எஸ்ஆர்எக்ஸ் சொத்துச் சந்தை நிறுவனங்களின் முன்னோடி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 919 கூட்டுரிமை வீடுகள் மறுவிற்பனை செய்யப்பட்டன. இது, அதற்கு முந்திய மார்ச் மாதத்தைக் காட்டிலும் 17.9 விழுக்காடு குறைவு. மார்ச்சில் 1,119 கூட்டுரிமை வீடுகள் கைமாறின.
அதே நேரத்தில், ஏப்ரல் மாதத்தில் கூட்டுரிமை மறுவிற்பனை வீடுகளின் விலை 1.2 விழுக்காடு உயர்ந்தது. இந்த விலையேற்றம் மத்திய சிங்கப்பூரில் 2.3 விழுக்காடாகவும் நகரோரப் பகுதிகளில் 1.7 விழுக்காடாகவும் இருந்தது.
மாறாக, புறநகர்ப் பகுதிகளில் கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை 0.3 விழுக்காடு குறைந்தது.
ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது, கூட்டுரிமை வீடுகளின் மறுவிற்பனை விலை 8.7 விழுக்காடு உயர்வுகண்டது.
புதிய தனியார் வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டதும் கடன்பெறுவதற்கான அதிகக் கட்டணமும் மறுவிற்பனைக்கு வந்த கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததுமே மறுவிற்பனை சரிவிற்கான காரணங்கள் என்று சொத்துச் சந்தைப் பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிச்சயமில்லாப் பொருளியல் சூழலால் வரும் மாதங்களிலும் இந்தச் சரிவு தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சென்ற ஏப்ரலில் தனியார் வீடுகள் விற்பனை 80.3 விழுக்காடு அதிகரித்து, 887 வீடுகள் விற்பனையாயின. தனியார் வீட்டு விற்பனையைப் பொறுத்தமட்டில், இதுவே ஆக அதிகம் என்பதைச் சுட்டிக்காட்டினார் 'இஆர்ஏ ரியால்டி நெட்வொர்க்' நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி யூஜின் லிம்.
வாடகைச் சந்தை நிலவரம் நன்றாக இருப்பதாலும் கூட்டுரிமை வீட்டு உரிமையாளர்கள் சிலர் தங்களது வீடுகளை விற்காமல் வாடகைக்கு விட முடிவு செய்துள்ளதாக திருவாட்டி வோங் குறிப்பிட்டார்.
சென்ற ஏப்ரல் மாதம் தங்ளின்/ஹாலந்து வட்டாரத்தில் உள்ள 'ஸ்கல்ப்சுரா ஏர்ட்மோர்' கூட்டுரிமைக் குடியிருப்புத் தொகுதியில் உள்ள ஒரு கூட்டுரிமை ஆக அதிகமாக $18 மில்லியனுக்குக் கைமாறியது.
முன்னதாக, கூடுதல் முத்திரை வரி உயர்வு கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியன்று நடப்பிற்கு வந்தது. அதன்படி, வெளிநாட்டினர் இங்கு வீடு வாங்கும்போது முத்திரை வரியாக 60% செலுத்த வேண்டும். முன்னர் இவ்விகிதம் 30 விழுக்காடாக இருந்தது.