புக்கிட் பாத்தோக்கில் செயல்பட்டு வந்த யூசோஃப் இஷாக் உயர் நிலைப் பள்ளி சென்ற ஆண்டு பொங்கோலில் புதிய வளாகத்திற்கு இடமாறியது.
இந்நிலையில், அப்பள்ளி வளாகத்தைப் புத்தாக்கமான முறையில் மறுவடிவமைப்பு செய்ய அக்கல்வி நிலையம் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு நேற்று அங்கீகாரம் கிடைத்தது.
புத்தாக்கத்திற்கான அமைச்சரின் விருதைப் பெற்ற ஆறு திட்டங்களில் இதுவும் ஒன்று.
யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளியின் மறுமேம்பாடு, புத்தாக்கமான பள்ளி வடிவமைப்புகள் வழக்கமான வகுப்பறையைத் தாண்டி எவ்வாறு கற்றலுக்கு ஆதரவாக இருக்கமுடியும் என்பதையும் எதிர்காலப் பள்ளிகளும் கற்றல் தளங்களும் எவ்வாறு இருக்கும் என்பதையும் காட்டுவதாகக் கல்வி அமைச்சு ஓர் அறிக்கைவழி தெரிவித்தது.
ஆசிரியர்கள் மாநாடு 2023ல் புத்தாக்கத்திற்கான அமைச்சரின் விருதை அறிமுகம் செய்துவைத்தார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்.
கல்வி அமைச்சின் தலைமையகம், பள்ளிகள், அமைச்சின் ஆணைபெற்ற அமைப்புகள் முழுவதிலும் பேரளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புத்தாக்கங்களை அந்த விருது அங்கீகரிக்கிறது.
முன்னதாக, சிங்கப்பூர் இளையர்கள் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள தலைவர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்று அமைச்சர் சான் வலியுறுத்தி இருக்கிறார்.

