இணையவழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித்திறத்திற்கும் எதிரான சட்டத்தின்கீழ் (பொஃப்மா) பிறப்பிக்கப்பட்ட திருத்த ஆணையை ரத்து செய்யக் கோரி 'டிரான்ஸ்ஃபர்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ்' குழு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்பு, தகவல் அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோ அம்மனுவைத் தள்ளுபடி செய்ததாக உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது.
போதைப்பொருள் குற்றத்திற்காக 46 வயதான தங்கராஜு சுப்பையாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அக்குழு ஃபேஸ்புக் பதிவு வழியாகப் பொய்யான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அப்பதிவிற்குமேல் திருத்த அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என்று இம்மாதம் 19ஆம் தேதி பொஃப்மா சட்டத்தின்கீழ் ஆணை பிறப்பிக்கப்பட்டது. உண்மைக்கு மாறான தகவல் இடம்பெற்றுள்ளது என்றும் சரியான கட்டுரைக்கான இணைப்பை அது உள்ளடக்கி இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
மேலும், அந்தத் திருத்த அறிவிப்பு தொடர்பில் அக்குழு ஒரு புதிய ஃபேஸ்புக் பதிவை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

