செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
882fd35a-0846-44ac-a15a-1cd75093fa45
-

மது அருந்திவிட்டு வாகனமோட்டிய சந்தேகத்தின்பேரில் இருவர் கைது

இரு வெவ்வெறு விபத்துகளில் தொடர்புடைய இரண்டு ஓட்டுநர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ரோட்ஸ்.எஸ்ஜி எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், ஆடம் சாலையில் சென்றுகொண்டு இருந்த வெள்ளைநிற கார் ஒன்று, சாலைத்தடுப்பில் ஏறி மரத்தில் மோதி, பக்கவாட்டில் கவிழ்ந்ததைக் காண முடிந்தது. அதன்பின் அம்மரமும் கார்மீது விழுந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்து குறித்து 4.15 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அந்த காரின் 30 வயது ஓட்டுநருக்குச் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்து விட்டார். அதற்குச் சில மணி நேரத்திற்குப் பிறகு, செல்லும் தெம்பனிஸ் அவென்யூ 10ல் கார் விபத்து நிகழ்ந்தது. சாலைத் தடுப்பின்மீது அடர்நீல நிற கார் ஒன்று நின்றிருந்ததைப் படங்கள் காட்டின. இதன் தொடர்பில் 32 வயது ஆடவர் கைதானார். இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடந்து வருகிறது.

மதுபோதையில் வாகனமோட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய ஆடவர்

மது அருந்தியபின் தன் சகோதரரின் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதை ஆடவர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஜெரமியா இங் கென் யூ, 35, என்ற அந்த ஆடவர் ஓட்டிச் சென்ற செந்நிற மெர்சிடிஸ் பென்ஸ் கார், மேலும் மூன்று கார்கள், ஒரு டாக்சி, ஒரு மோட்டார்சைக்கிளுடன் விபத்துக்குள்ளானது. கடந்த 2021 டிசம்பர் 23ஆம் தேதி நிகழ்ந்த இவ்விபத்தில் அவ்வாகனங்களில் ஒன்றின் ஓட்டுநர் மாண்டுபோனார்; மேலும் ஐவர் காயமுற்றனர். இங்கைச் சோதனைக்கு உட்படுத்தியபோது, அவரது 100 மில்லிலிட்டர் மூச்சுக் காற்றில் 42 மைக்ரோகிராம் மது கலந்திருந்தது கண்டறியப் பட்டது. மது அருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதையும் அதனால் திரு கென் வோங் முன் சூனுக்கு மரணம் விளைவித்ததையும் ஜெரமியா ஒத்துக்கொண்டார். 59 வயதான திரு வோங் தனியார் வாடகை வாகன ஓட்டுநராக இருந்தார். சம்பவ நாளன்று இரவு 7 மணியிலிருந்து 10 மணிக்குள் இங், தன் சகோதரர் மற்றும் நண்பர்கள் இருவருடன் தெம்பனிஸ் ஸ்திரீட் 93ல் உள்ள தனது அலுவலகத்தில் இரவு உணவருந்தினார். அப்போது அவர் நான்கு கலன் பீர் அருந்தியதாகக் கூறப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தன் சகோதரர் முன்னிருக்கையில் அமர்ந்திருக்க, அவரது காரை இங் ஓட்டிச் சென்றார். தெம்பனிஸ் அவென்யூ 1 வழியாக அவர் மிகுந்த வேகத்தில் காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்பட்டது. வேக வரம்பு 60 கி.மீ. என்றிருந்தபோதும் 157 - 169 கிலோமீட்டருக்கு இடைப் பட்ட வேகத்தில் அவர் காரோட்டியதாகச் சொல்லப்பட்டது.