சீனாவும் மத்திய கிழக்கு நாடுகளும் பொருளியல் மற்றும் வர்த்தகத் தொடர்புகள் மூலம் நெருங்கி வரும் வேளையில் வளைகுடா நாடுகள் பாதுகாப்புப் போன்ற கூடுதல் உறவுகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவது இயல்பே என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் (படம்) தெரிவித்துள்ளார்.
"வட்டாரப் பாதுகாப்பு என்று வரும்போது இன்றைய காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு நிகராக வேறெந்த நாடும் இல்லை என்பதை மத்திய கிழக்கு நாடுகள்கூட ஒப்புக்கொள்கின்றன. இதற்கு முன்னர் இருந்ததைப்போல அமெரிக்கா ஒரு நம்பிக்கைக்குரிய பாதுகாப்புப் பங்காளியா என்பதில் உறுதி இல்லாத நிலையிலும் அந்த நாடுகள் இக்கருத்தைக் கொண்டுள்ளன," என்றார் அவர்.
அமெரிக்காவின் உள்நாட்டு நிலவரம் மாறி இருப்பதைக் குறிப்பிட்டுப் பேசிய திரு சண்முகம், "பாதுகாப்பு வழங்கக்கூடிய நாடு அமெரிக்கா என்பது நமக்குத் தெரியும். ஆனால், ஏதேனும் நிகழ்ந்தால் அது நமக்குத் தோள் கொடுக்குமா என்பதில் உறுதி இல்லாதபட்சத்தில் மாற்று அம்சங்களையே நாடவேண்டி இருக்கும்," என்றார்.
மத்திய கிழக்கு கல்விக் கழகத்தின் வருடாந்திர மாநாடு நேற்று ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்றது. மாநாட்டின் ஒரு நிகழ்வாக நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்று திரு சண்முகம் பேசினார்.
"மத்திய கிழக்கில் இடம்பெற்று உள்ள நாடுகள் தங்களது வட்டாரச் சூழலை வடிவமைக்க பிற நாடுகள் உதவுகின்றன.
"உதாரணத்திற்கு, சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகளை மீட்க சீனா பணியாற்றியது. இதன் பின்னணியில் ஓமான் முக்கிய பங்கு வகித்து, அமைதியாகப் பணியாற்றியது.
"அமெரிக்காவாக இருந்தாலும் சீனா, ரஷ்யா அல்லது ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் வல்லரசு என்கிற கோணத்தில் மத்திய கிழக்கு நாடுகள் பார்ப்பதில்லை.
"சிங்கப்பூர் போன்ற எந்த ஒரு நாடும் தேசிய நலன் அடிப்படையிலேயே உறவைத் தீர்மானிக்கும்.
"அதாவது, அமெரிக்காவுடனேயே இருக்கலாமா அல்லது சற்று மாறுபட்டு சிந்திக்கலாமா என்பதே அது," என்று திரு சண்முகம் விளக்கினார்.
கலந்துரையாடலை நடத்திய கல்விக்கழகத்தின் தலைவர் பிலஹரி கெளசிகன், அமெரிக்க-சீன விரோதப்போக்கில் மாற்றம் நிகழ்வதாகக் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு நாடுகள் பலவழிகளில் மாற்று முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்காவை மட்டும் நம்பியிராமல் இன்னும் அதிகமான பன்னாட்டு அணுகுமுறையைப் பின்பற்ற முடிவெடுத்திருப்பது அந்த முயற்சிகளில் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
"அமெரிக்காவுடனான உறவு நீடிக்கும் வேளையில் மத்திய கிழக்கு நாடுகள் ரஷ்யாவுடனும் சாமர்த்தியமான உறவைப் பேணுகின்றன. அதேநேரம் சீனாவுடனும் புதிதாக உறவை அவை ஏற்படுத்தி உள்ளன," என்றார் திரு கெளசிகன்.

