இந்தோனீசியாவில் புதிதாக உருவாகிவரும் தலைநகரத்தில் சிங்கப்பூருக்கான வாய்ப்புகளை அடையாளம் காண சிங்கப்பூரில் இருந்து 130 பேர் அடங்கிய பேராளர் குழு ஒன்று ஜகார்த்தா சென்றுள்ளது.
அரசாங்க அதிகாரிகளும் வர்த்தகர்களும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மார்ச் மாதம் இருநாட்டுத் தலைவர்களின் ஓய்வுத்தள சந்திப்பின் தொடர்ச்சியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.
மேலும், சிங்கப்பூரிலும் இந்தோனீசியாவிலும் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் முயற்சியாக இந்தப் பயணம் அமைந்திருப்பதாக சிங்கப்பூருக்கான இந்தோனீசியத் தூதர் சூர்யோ பிரதோமோ 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் கூறினார்.
இப்படி ஒரு வர்த்தகப் பயணம் நடைபெறும் என்று சிங்கப்பூரில் தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பை ஒட்டி இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கூறியிருந்தார்.
புதிய தலைநகர் நுசந்தராவுக்கான சிங்கப்பூர் குழுவின் மூன்று நாள் பயணத்துக்கு 'சிங்கப்பூர் மிஷன்' என்று பெயரிடப்பட்டு உள்ளது.
கிழக்கு கலிமந்தானில் அமைந்துள்ள இந்த நகரில் சிங்கப்பூருக்குத் தேவையான வாய்ப்புகளை சிங்கப்பூர் வர்த்தகர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட இப்பயணம் கைகொடுக்கும் என்று திரு சூர்யோ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "நுசந்தரா தலைநகரின் கட்டுமானத்திற்கு US$32 பில்லியன் (S$43.3 பில்லியன்) வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே ஆகப்பெரிய பொருட்செலவு கொண்ட பெரியதொரு திட்டம் இது.
"அரசாங்க அலுவலகங்களுக்கும் அரசாங்கக் கட்டடங்களுக்கும் தேவையான வசதிகளை மட்டுமே இந்தோனீசிய அரசாங்கம் உருவாக்கி வருவதால் தொழில்முனைவோருக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. இதர முதலீடுகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தனியார் துறையினரை ஈர்க்கும்," என்றார்.
சிங்கப்பூரின் பரப்பளவைக் காட்டிலும் கிட்டத்தட்ட மும்மடங்கு பெரிதாக, 2,561 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் நுசந்தரா உருவாகி வருகிறது. இந்தப் புதிய தலைநகர் குறித்த அறிவிப்பை மூன்றாண்டுகளுக்கு முன்னர் அதிபர் ஜோக்கோவி வெளியிட்டார். இதனை உருவாக்குவதற்கான செலவில் 20 விழுக்காட்டை இந்தோனீசிய அரசாங்கமும் எஞ்சிய செலவுகளை தனியார் துறையினரும் ஏற்பர் என கூறப்பட்டது.

