மார்ச் மாதம் குறைந்திருந்த கூட்டுரிமை (கொண்டோமினிய) வீடுகளுக்கான வாடகை சென்ற மாதம் 1 விழுக்காடு ஏறியது.
அதேபோல வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் வாடகையும் மிகச் சிறிய 0.8 விழுக்காடு ஏற்றத்தைப் பதிவு செய்தது.
வீவக வாடகைச் சந்தையில் 34வது மாதமாக வாடகை தொடர்ந்து ஏறியுள்ளது.
வாடகைக்கு விடப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை ஏப்ரலில் 13.8 விழுக்காடு அதிகரித்தது. மார்ச் மாதம் 4,920 வீடுகள் வாடகைக்கு விடப்பட்ட நிலையில் சென்ற மாதம் அந்த எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்தது.
வீவக வாடகை வீடுகளின் எண்ணிக்கையும் ஏப்ரலில் 5.8 விழுக்காடு அதிகரித்தது. மார்ச் மாதம் 3,009 வீடுகளும் ஏப்ரல் மாதம் 3,189 வீடுகளும் வாடகைக்கு விடப்பட்டதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
சொத்துச் சந்தை இணையவாசல்களான 99.co மற்றும் எஸ்ஆர்எக்ஸ் ஆகியன நேற்று வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகளில் இந்த விவரங்கள் காணப்பட்டன.
சிறிய அளவிலான வாடகை ஏற்றம் என்பது வாடகைக்கு வருவோரின் விருப்பமாக உள்ளது. அந்தத் தேவையை நிறைவேற்ற வீட்டு உரிமையாளர்கள் முன்வந்ததைத் தொடர்ந்து வாடகைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஹட்டன்ஸ் ஏஷியா சொத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் யிப் கூறினார்.
அதேநேரம், மாதாந்திர வீட்டுக் கடன் தொகை அதிகரித்தன் விளைவாக இன்னும் கூடுதல் வாடகையை வீட்டு உரிமையாளர்கள் எதிர்பார்ப்பதாக இஆர்ஏ ரியல்ட்டி நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி யூஜின் லிம் தெரிவித்துள்ளார்.
நகரப் பகுதிகளில் வாடகைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1.7 விழுக்காடும் புறநகரில் 1.6 விழுக்காடும் அதிகரித்தன. மாறாக, மத்திய வட்டாரத்தில் வாடகை வீடுகளின் எண்ணிக்கை 0.2 விழுக்காடு குறைந்தது.
மத்திய வட்டாரத்தில் வாடகை அதிகமாக உயர்த்தப்பட்டதன் காரணமாக வாடகைக்குக் குடியிருந்த பலரும் நகருக்குள்ளேயே வேறு இடங்களுக்கு மாறியதன் விளைவாக வாடகை வீடுகளின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்று திரு லிம் குறிப்பிட்டார்.
அதற்கு அவர் ஓர் உதாரணத்தையும் விளக்கினார்.
"ஆர்ச்சர்ட் வாட்டாரத்தில் உள்ள ஆர்ட்மோர் ரெஸிடென்ஸ் கூட்டுரிமை புளோக்கில் உள்ள நான்கறை வீட்டின் மாத வாடகை ஏப்ரல் மாதம் $38,000ஆக இருந்தது. அதேநேரம், கெப்பல் பே வட்டாரத்தில் உள்ள கரிபியன் கூட்டுரிமை புளோக்கில் நான்கறை வீட்டின் மாத வாடகை $14,000," என்றார் திரு லிம்.

