வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இணையப்பக்கத்தில் நுழைவதற்கான காத்திருப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக வீவக தெரிவித்தது.
புதிய வீடுகளின் விற்பனை நேற்று தொடங்கிய வேளையில் இணையப் பக்கத்தில் நுழைய இரண்டு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருந்ததாக சில விண்ணப்பதாரர்கள் புகார் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து காத்திருப்பு நேரம் 20 நிமிடங்களுக்குக் குறைக்கப்பட்டதாக வீவக கூறியது. நேற்றுக் காலை காத்திருப்பு நேரம் 3 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை இருந்ததாகவும் அது குறிப்பிட்டது.
புதிய வீடுகளுக்கு விண்ணப்பம் செய்வோர் மெய்நிகர் காத்திருப்பு அறைக்குள் நுழைந்து தமக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். ஒரேநேரத்தில் பலரும் உள்நுழையும்போது ஏற்படக்கூடிய இணைய நெரிசலைக் குறைக்க 2022 நவம்பர் வீட்டு விற்பனையின்போது இந்த வசதியை வீவக அறிமுகப்படுத்தியது.
பிடிஓ வீடுகள் மற்றும் கடந்த விற்பனையில் எஞ்சிய வீடுகளின் ஒன்றிணைந்த விற்பனையாலும் பிடோக், சிராங்கூன் போன்ற முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் வீட்டு விற்பனை தொடங்கப்பட்டதாலும் நேற்று இணையவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்து நெரிசல் ஏற்பட்டு இருக்கலாம் என்று வீவக தனது அறிக்கையில் தெரிவித்தது.