இன்று முதல் உணவு அங்காடி நிலையங்களில், காப்பிக் கடைகளில் உணவு அருந்தச் செல்வோர் சாப்பிட்ட பின் தங்கள் உணவுத் தட்டுகளை அவற்றுக்கு உரிய இடத்தில் வைத்துவிட வேண்டும்.
அத்துடன், சாப்பிட்ட மிச்சம் மீதி, மெல்லிழைத் தாள்கள் போன்வற்றையும் அவர்கள் அப்புறப்படுத்தி விடவேண்டும்.
இவற்றை செய்யத் தவறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று அறிவித்தது.
இதில் முதல் முறை தவறு செய்வோருக்கு எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்படும். மீண்டும் மீண்டும் தவறு செய்வோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.
எனினும், முதியோர், செயல் திறன் இழந்த உடல் நலிவுற்றோர் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. மாறாக, அவர்களுடன் சேர்ந்து உணவு அருந்த வருவோர் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் வாரியம் கூறியுள்ளது.
உணவு அங்காடி நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சாப்பிட்டவர்களின் தட்டுகளை உரிய இடத்தில் வைக்க, சாப்பிட்ட மிச்சத்தை சுத்தம் செய்ய உதவினால் அவர்களின் சேவையை உணவு உண்டவர்கள் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்றும் வாரியம் அறிவுறுத்துகிறது.
இதில் அங்காடி நிலை துப்புரவு ஊழியர்கள், அவர்களைப் பணியமர்த்தும் குத்தகைக்காரர்கள் ஆகியோரிடம் அங்காடி நிலையத்தில உணவு அருந்தும் வாடிக்கையாளர்களின் பொறுப்பு குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதையும் வாரியம் சுட்டியது.
எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து உணவுத் தட்டுகளை உரிய இடத்தில் வைக்கவும் சாப்பிட்ட இடத்தை சுத்தமாக வைத்திருக்கவும் ஊக்குவிக்கப்படுவதாக வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர் ஒருவர் தான் சாப்பிட்ட தட்டை, மிச்ச உணவை அப்புறப்படுத்தாமல் போகலாம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் முந்தைய வாடிக்கையாளர் விட்டுச் சென்ற தட்டை புதிதாக உணவு உண்ண வருபவர் அப்புறப்படுத்த வேண்டியதில்லை.
அதைச் செய்ய உணவு அங்காடி நிலைய அல்லது காப்பிக் கடை ஊழியர்கள் செய்வர் என்று வாரியம் தெளிவுபடுத்தியது.
உணவு அங்காடி நிலையங்கள், காப்பிக் கடைகளுக்கு சோதனை செய்ய வரும் அமலாக்க அதிகாரிகள் ஒருவரின் விவரங்களைக் கேட்பர்.
இதில் அவர்களிடம் சிங்பாஸ் செயலி உட்பட எந்தவிதமான புகைப்பட அடையாளத்தையும் காட்டலாம்.
அப்படி ஒருவர் சோதனையின்போது விவரங்களைக் கைவசம் வைத்திருக்கவில்லை எனில் அமலாக்க அதிகாரி சம்பந்தப்பட்ட நபரின் அடையாளத்தை உறுதிசெய்யும் பொருட்டு காவல் துறையின் உதவியை நாடுவார் என்று வாரியம் கூறுகிறது.
சில சந்தர்ப்பங்களில் ஒருவர் தான் உணவு உண்ட மேசையிலிருந்து குடிக்க பானம் வாங்கச் செல்வார்.
அப்பொழுது அந்த நபர் பானம் வாங்கியபின் திரும்ப வந்து மேசையிலுள்ள தட்டு, மற்ற பொருள்களை அகற்றலாம் என்ற எண்ணத்துடன் இருந்திருக்கலாம்.
இந்நிலையில், அவரை அமலாக்க அதிகாரி சாப்பிட்ட இடத்தை துப்புரவாக வைத்திருக்கவில்லை என்று குற்றம் சுமத்தினால் என்ன செய்வது என்ற கேள்வி எழலாம்.
இதில் அந்த நபர் பானம் வாங்குவதற்காகச் சென்றுள்ளார் என்றும் அவர் திரும்ப வந்து சுத்தம் செய்யும் எண்ணத்தில் இருந்தார் என்றும் அந்த அதிகாரிக்குத் தெரியவந்தால், அவரை அந்த அதிகாரி மேசையை விட்டுச்செல்லும் முன் சுத்தம் செய்துவிட்டுச் செல்லச் சொல்வார்.
அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று வாரியம் கூறியுள்ளது.சில சந்தர்ப்பங்களில், தட்டுகளை திரும்ப வைக்கும் இடம் நிரம்பியிருக்கலாம்.
அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அங்கு ஒருவர் தட்டை வைக்க முடியாத நிலையில், அவர் தனது தட்டை அருகிலேயே வைத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

