குழந்தைகளுக்குச் சரியான அளவில், சத்தான, பாதுகாப்பான உணவு சமைக்க உதவி
கைக்குழந்தைகளுக்கும் 12 வயதிற்குட்பட்ட சிறாருக்கும் பாதுகாப்பாகவும் சத்துமிக்கதாகவும் சரியான அளவிலும் உணவு சமைக்க பராமரிப்பு நிலைய நடத்துநர்களும் அவர்களின் உணவு சேவை வழங்குநர்களும் உதவிபெறலாம்.
'எஸ்எஸ் 692' எனும் கைக்குழந்தைகள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, உணவு சேவைகளுக்கான சிங்கப்பூர்த் தரநிலை 692 வழிகாட்டி நெறிமுறைகள் அதற்கு வகைசெய்யும்.
உணவு, சுகாதாரம் மற்றும் தர நடைமுறைகள், உணவு ஒவ்வாமை, மிகையுணர்திறன் மற்றும் ஒவ்வாமை மேலாண்மை, ஊட்டச்சத்துப் பராமரிப்பு, உணவுப்பட்டியல் திட்டமிடல் போன்ற பல்வேறு அம்சங்களை அந்தப் புதிய தரநிலை உள்ளடக்கி இருக்கிறது.
6, நியூ பொங்கோல் சாலையில் செயல்படும் மை ஃபர்ஸ்ட் ஸ்கூல் பாலர் பள்ளியில் நேற்று நடந்த 'எஸ்எஸ் 692' தரநிலை அறிமுக நிகழ்ச்சியில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி கலந்துகொண்டார்.
நல்ல உணவுப் பழக்கத்தின் மூலம் உடற்பருமனால் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று அண்மைய ஆய்வு முடிவுகள் குறிப்பிட்டுள்ள வேளையில், இந்தத் தரநிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் திரு ஸுல்கிஃப்லி தெரிவித்தார்.
மாறாக, குழந்தைப் பருவத்தில் மோசமான உணவுப்பழக்கங்களும் கண்டபடி ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்வதும் உடற்பருமனை ஏற்படுத்தி, இதயநோய்கள், நீரிழிவு, சிலவகைப் புற்றுநோய்கள் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகப்படுத்திவிடும் என்றும் அமைச்சர் சொன்னார்.
அதனால், சிறுவயதிலேயே நல்ல உணவுப் பழக்கங்களைக் கற்றுக்கொடுப்பதும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்குவதும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.
சில பள்ளிகளிலும் பாலர் பள்ளிகளிலும் குறைந்த உப்புள்ள சுவைக்கூட்டு (சாஸ்), சுகாதாரமான எண்ணெய், தீட்டப்படாத அரிசி போன்றவற்றைக் கொண்டு உணவு சமைக்க எடுக்கப்படும் முயற்சிகளை திரு மசகோஸ் சுட்டிக்காட்டினார்.
இப்போதைய முயற்சிகளை முழுமைப்படுத்துவதாக புதிய தரநிலை அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் (என்எச்ஜி) தலைமையில் சுகாதாரப் பராமரிப்பு, தேசிய முகவைகள், ஆய்வு நிலையங்கள், உயர்கல்வி நிலையங்கள், உரிய தொழிற்துறைச் சங்கங்கள், சேவை வழங்குநர்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய 20 பேர் பணிக்குழு இப்புதிய 'எஸ்எஸ் 692' தரநிலையை உருவாக்கி இருக்கிறது.
உணவுப் பாதுகாப்பு, சுகாதாரத் தணிக்கைகள், உணவுத் தேர்வு, தயாரிப்பு, வயதுக்கேற்ற உணவு அளவு உள்ளிட்டவை அடங்கிய உணவுப் பட்டியல் உருவாக்கம், குழந்தைகளுக்குச் சரியான உணவு சீராக வழங்கப்படுவதை உறுதிசெய்தல், கைக்குழந்தைகளை திட உணவிற்குப் பழக்கப்படுத்தல் போன்றவை குறித்த பரிந்துரைகள் புதிய தரநிலையின் முக்கிய அம்சங்கள் என்று என்எச்ஜி, சிங்கப்பூர் தயாரிப்புக் கூட்டமைப்பு, என்டர்பிரைஸ் சிங்கப்பூர் ஆகியவற்றின் கூட்டறிக்கை தெரிவித்தது.

