செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7f141327-1800-443f-8907-2be388b7a6b4
-

மெதுவோட்டம் சென்றவரை இடித்து காயப்படுத்திய 17 வயது இளையர்

பதிவுசெய்யப்படாத தனிநபர் நடமாட்டச் சாதனத்தை வேகமாக ஓட்டி மெதுவோட்டம் சென்றவர்மீது இடித்து, காயப்படுத்திய 17 வயது இளையர் ஒருவர் 18 மாதங்கள் நன்னடத்தைக் கண்காணிப்பில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. கடந்த 2022 மே 24ஆம் தேதி இவ்விபத்து நிகழ்ந்தது. வாகனம் இடித்ததில் மெதுவோட்டக்காரருக்குப் பல இடங்களில் எலும்புமுறிவு ஏற்பட்டது. அத்துடன், இடது சிறுநீரகத்திலும் காயமுற்றதால் அந்த 52 வயது ஆடவர் 41 நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருக்க நேரிட்டது. தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கான வேகக் கட்டுப்பாடு மணிக்கு 25 கிலோமீட்டர் மட்டுமே. ஆனால், அவர் அதனை 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றதால், தகுந்த நேரத்தில் நிறுத்தமுடியாமல் எதிரே வந்த திரு யுவென் சென் நியோமீது இடிக்க நேர்ந்தது.

கண்காணிப்புப் படக்கருவியைப் பொருத்த உதவியவரே களவாடினார்

வாடிக்கையாளர்களின் பணத்தைத் தமது கடை ஊழியர்களில் இருவரே கையாடியதை முதலாளி கண்டுபிடித்தார். அந்த இருவரில் ஒருவர், அக்கடையில் கண்காணிப்புப் படக்கருவி பொருத்தவும் கடையில் களவுபோவதைக் கண்டுபிடிக்கவும் உதவியவர் என்று திரு டேனியல் டான் என்ற அம்முதலாளி கூறினார். அவருக்கு மொத்தம் பத்துக் கடைகள் உள்ளன. அவற்றில், அங் மோ கியோவில் உள்ள ஏஞ்சல் சூப்பர்மார்ட்டில் வேலைசெய்யும் பெண் ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களிடம் பெற்ற பணத்தை கல்லாப்பெட்டியில் போடாததைக் காணொளிகளை ஆய்வுசெய்தபோது திரு டான் கண்டு பிடித்தார். அதே கடையில் பணிபுரியும் இன்னொரு பெண் ஊழியர் கல்லாப்பெட்டியில் இருந்து திருடியதையும் அவர் கண்டுபிடித்தார். காவல்துறையில் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்விரு பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.

காவல்துறை வேண்டுகோள்

திரு ஜான் தாமஸ், 61, என்ற இவரின் குடும்பத்தினரோ உறவினர்களோ காவல்துறையைத் தொடர்புகொள்ளும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மனநலக் கழகத்தில் முன்னர் சேர்க்கப் பட்டிருந்த திரு ஜான் சென்ற மாதம் 28ஆம் தேதி இறந்துவிட்டார். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் 1800-255-0000 என்ற நேரடி அழைப்பெண் மூலமாக அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையப்பக்கம் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும்.