கிட்டத்தட்ட $40 மில்லியன் அரசாங்க நிதியைக் கையாடல் செய்ய கும்பல் ஒன்றுக்கு உதவிய ஆடவருக்கு 13 ஆண்டுகள் 9 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இதுவரை நடந்தவற்றில் ஆகப் பெரிய அரசாங்க நிதி மோசடி இது என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
டேவிட் லிம் வீ ஹொங், 44, என்ற அந்த ஆடவர் 2017 செப்டம்பர் 7ஆம் தேதிக்கும் நவம்பர் 1ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தக் குற்றங்களைப் புரிந்தார்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பை ஏமாற்றிய மோசடிக் கும்பலில் தானும் ஒருவன் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
கடந்த மார்ச் மாதம், டேவிட் 15 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அவர்மீதான மேலும் 33 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
அவருடைய கூட்டாளிகள் நால்வருக்கு ஏற்கெனவே 17 ஆண்டுகள் ஒன்பது மாதங்கள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது.
பயிற்சி வகுப்பு மானியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஊழியர்களை திறன் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பும் சிங்கப்பூர் நிறுவனங்கள் மானியம் கோரி விண்ணப்பிக்கலாம்.
செயல்படாத ஒன்பது நிறுவனங்களின் பெயரில் ஊழியர்கள் என்று நம்பப்படும் 25,000 பேர், இயக்குநர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரைப் பயன்படுத்தி லிம்மும் கும்பலின் மற்ற உறுப்பினர்களும் பயிற்சி வகுப்பு மானியம் கோரி 8,300க்கும் மேற்பட்ட மோசடி விண்ணப்பங்களை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பிடம் சமர்ப்பித்தனர். ஆனால், எந்தவொரு பயிற்சி வகுப்பும் நடத்தப்படவில்லை.
அந்த ஒன்பது நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள் மானியம் கோரி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தன. மற்ற மூன்று நிறுவனங்களும் பயிற்சி வழங்குநர்கள் என்று குறிப்பிடப்பட்டன.
அவற்றுள் கிளென் பாயின்ட் கார்ப் என்ற நிறுவனத்தைத் தவிர, மற்ற நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் கிட்டத்தட்ட $40 மில்லியன் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதில் பெரும்பகுதித் தொகை வங்கிப் பணமாற்றம் அல்லது ரொக்கக் காசோலை மூலம் எடுக்கப்பட்டுவிட்டது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு, மானியக் கோரிக்கை விண்ணப்பங்கள் குறித்து 2017 நவம்பர் 1ஆம் தேதி காவல்துறையிடம் புகார் செய்தது.
மானியத் தொகையில் இதுவரை $18 மில்லியன் மீட்கப்பட்டுவிட்டது. இன்னும் $21 மில்லியனுக்கும் மேலான தொகை மீட்கப்பட வேண்டும்.

