உருவாக்கச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் (ஜெனரேட்டிவ் ஏஐ) தனது செயல்திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் சிங்கப்பூர் நாணய ஆணையம், கூகல் கிளவுட் தளத்துடன் இணைந்து செயல்படவிருக்கிறது.
இதன்மூலம், நம்பகமான உருவாக்கச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பரந்த அளவில் பயன்படுத்த சிங்கப்பூர் நிதித் துறையை ஊக்குவிக்க முடியும் என்று ஆணையம் நம்புகிறது.
உருவாக்கச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி, உரை, செயற்கைத் தரவு, படங்கள் உள்ளிட்ட புதிய உள்ளடக்கத்தினை உருவாக்கலாம்.
இதன் தொடர்பில் கூகல் கிளவுட் தளத்துடன் நாணய ஆணையம் ஒரு புரிந்துணர்வுக் குறிப்பில் நேற்று கையெழுத்திட்டது. ஆணையச் செயல்பாடுகள் தொடர்பில் நம்பகமான உருவாக்கச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பச் செயலிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப வாய்ப்புகளை ஆராயவும் ஆணையத்தின் தொழில்நுட்பவியலாளர்கள் செயற்கை நுண்ணறிவில் தேர்ச்சிமிக்கவர்களாக இருக்க ஊக்குவிக்கவும் இந்த புரிந்துணர்வுக் குறிப்பு வகைசெய்யும்.

