பிரதமர் திரு லீ சியன் லூங்குக்கு மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் முதலாவது கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து மீண்டு வந்த சில நாட்களிலே மீண்டும் அவர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
அவர் தமது ஃபேஸ்புக்கில் நேற்று வெளியிட்ட பதிவில், தாம் நலமுடன் இருப்பதாகவும் தமது மருத்துவர்கள் தம்மைக் கிருமித்தொற்று பாதிப்பில் இருந்து விடுபடும் வரை தனிமையில் இருக்கும்படி பரிந்துரைத்திருப்பதாகவும் கூறினார்.
கிருமித்தொற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து முதல் 10 விழுக்காட்டினருக்கு மீண்டும் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படும் சாத்தியம் உண்டு என்றும் முதல் தொற்றுடன் ஒப்பிடுகையில் இதில் ஆபத்து அதிகம் இல்லை என்று தமது மருத்துவர்கள் கூறியதாகவும் திரு லீ தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
அதில் அவர், "ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ள நான் மிகவும் ஆவலுடன் இருந்தேன். ஆனால், தொற்று பாதிப்பு காரணமாக என்னால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை.
"விழாவின் ஏற்பாட்டாளர்களிடமும் அதில் பங்கேற்ற அனைவரிடமும் நான் கலந்துகொள்ளாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற நான் வாழ்த்துகிறேன்," என்று அந்தப் பதிவில் கூறினார்.
பிரதமர் லீக்கு முதல் முறை கொவிட்-19 கிருமித்தொற்று மே மாதம் 22ஆம் தேதி உறுதிசெய்யப்பட்டது.
பிரதமர் லீ வீட்டில் இருந்து கிருமித்தொற்றுக்கு சிகிச்சை பெறுவதால், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், தற்காலிகப் பிரதமராகச் செயல்படுவார் என்று பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்தது.

