டான் டோக் செங் மருத்துவமனையில் அவசரநிலைப் பிரிவில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்ட பராமரிப்பு முறைக்குப் பின், காத்திருக்கும் நேரம், சிகிச்சை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஓர் ஆண்டுக்கு 132,000 பேர் இங்கு இயங்கும் அவசரநிலைப் பிரிவிற்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அதில் 19,000 பேர் அப்பிரிவுக்கு வரும் அவசரநிலையற்ற நோயாளிகள். இவர்கள் 15 விழுக்காட்டினர்.
தங்களின் மூட்டுகள், எலும்புகள் மற்றும் தசைகளில் ஏற்படும் வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர்.
இதுபோன்ற வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக வருவோரின் எண்ணிக்கை அதிகமானதால் டான் டோக் செங் மருத்துவமனை ஒரு புதிய பராமரிப்பு முறையைத் தொடங்கியது.
அந்த முறையில் அவசர நிலைப் பிரிவுக்கு சிகிச்சைக்காக வருவோர் முதலில் நன்கு பயிற்சி பெற்ற இயன்மருத்துவரைச் சந்திப்பார்கள்.
எலும்பு மற்றும் தசை தொடர்பான பிரச்சினைகளுடன் அவர்கள் வந்திருந்தால், அதற்கு இயன்மருத்துவரே சிகிச்சை அளிப்பார். இந்த முறையால் சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரம் மேம்படும். மேலும், சரியான நேரத்தில் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.
இயன்மருத்துவம், அவசரநிலை, எலும்பியல், கை, மறுசீரமைப்பு நுண் அறுவை சிகிச்சை, கதிரியக்கப் பிரிவுகள் ஆகியவை ஒன்றிணைந்து இந்த முறையை 2022 ஜூன் மாதம் டான் டோக் செங் மருத்துவமனையில் தொடங்கின.
"எலும்புகள், தசைகளில் இருக்கும் பிரச்சினைகளுக்காக சிகிச்சைக்கு வருவோரைத் திறம்படக் கையாள இயன்மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
"இந்த சிகிச்சை முறை ஆஸ்திரேலியாவிலும் பிரிட்டனிலும் அதிகமாகப் பயன்படுத்தி வந்தாலும் டான் டோக் செங் மருத்துவமனைதான் சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளிலே முதன் முறையாக இந்த முறையைப் பயன்படுத்தியது," என்று அந்த மருத்துவமனையின் முதன்மை இயன்மருத்துவர் கோ ஷுவேடிங் கூறினார்.
2022 ஜூன் மாதம் முதல் நன்கு பயிற்சி பெற்ற இயன்மருத்துவர்கள் இதுவரை 134 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளனர்.
அவர்கள் நோயாளிகளைப் பார்த்து, சிகிச்சையளித்தாலும் அவர்களுக்குத் தேவையான மருந்துகளையும் மருத்துவ விடுப்புச் சான்றிதழையும் மருத்துவரே வழங்குகிறார்.
"இதன் மூலம் எங்களால் உயிருக்கு ஆபத்தான அவசரநிலைசிகிச்சையளிப்பதில் அதிக கவனம் செலுத்த முடிகிறது. மேலும் அவசரப் பிரிவின் செயல்திறனும் மேம்படும்," என்று அவசரநிலைப் பிரிவின் மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் டெரன்ஸ் சீ கூறினார்.
இந்த சிகிச்சை முறையால், இத்தகைய நோயாளிகளின் காத்திருக்கும் நேரம் 30லிருந்து 50 விழுக்காடு வரை குறைந்துள்ளது என்றும் இயன்மருத்துவ சிகிச்சை நாடும் நோயாளிகளின் காத்திருக்கும் நேரம் 70% வரை குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டது.
இதர சிங்கப்பூர் அரசாங்க மருத்துவமனைகளும் தங்கள் அவசரநிலைப் பிரிவுகளில் நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.