மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் மே 25ஆம் தேதி வரி செலுத்தப்படாத 4,999 சிகரெட் பெட்டிகளைக் கடத்தும் முயற்சியை குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையம் முறியடித்து உள்ளது.
மலேசியாவில் பதிவான லாரி ஒன்று துவாஸ் சோதனைச்சாவடியில் கூடுதல் சோதனைக்கு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் சமையலறைத் துண்டுகளுக்கு இடையில் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஆணையம் அதன் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
மேல் விசாரணைக்காக, இந்தப் பிரச்சினை சிங்கப்பூர் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 18ஆம் தேதி துவாஸ் சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட 12,708 சிகரெட் பெட்டிகளே, நிலச் சோதனைச்சாவடிகளில் இவ்வாண்டு இதுவரை கைப்பற்றப்பட்ட ஆகப் பெரிய எண்ணிக்கையிலான வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளாகும்.

