காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்றியதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

காப்புறுதி நிறுவனத்தை ஏமாற்றியதாக ஆடவர்மீது குற்றச்சாட்டு

2 mins read
49f9d7d0-a8ad-448c-9ed6-833e9e643f6a
-

'ஷாப் இன்­ஷு­ரன்ஸ் சிங்­கப்­பூர்' காப்­பு­றுதி நிறு­வ­னத்­தில் பணி­புரிந்த ஆட­வர் ஒரு­வர், போலியான கோரிக்­கை­க­ளைச் சமர்ப்­பித்து அந்­நி­று­வ­னத்தை $8.9 மில்­லி­யன் வழங்­க­வைத்து ஏமாற்­றி­ய­தற்­காகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளார்.

சுயாண்டி என்ற அந்த நபர், ஏழாண்­டுக் கால­கட்­டத்­தில் கிட்­டத்­தட்ட 300 போலியான கோரிக்­கை­களைச் சமர்ப்­பித்து நிறு­வனத்தை ஏமாற்­றி­ய­தா­கக் கூறப்­படு­கிறது.

இதில் வழங்­கப்­பட்ட தொகை அனைத்­தும் மூன்­றாம் தரப்பு வங்கிக் கணக்­கு­களில் போடப்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு ஜூலை மாதத்­திற்­கும் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட காலத்­தில், 58 முறை மோசடி செய்யும் நோக்கத்துடன் போலி மின்­னஞ்­சல்­களை அனுப்பி, அந்­தக் காப்­பு­றுதி நிறு­வ­னம் மூன்­றாம் தரப்பு வங்­கிக் கணக்­கு­க­ளுக்கு $1.6 மில்­லி­ய­னுக்­கும் மேல் வழங்­க­வைத்த குற்­றத்­திற்­கா­க­வும் அவர்­மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

45 வய­தான அந்த சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­மீது நேற்று 22 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. ஏமாற்­றிய குற்­றத்­திற்­காக 7 குற்­றச்­சாட்­டு­களும் ஏமாற்­றும் நோக்­கத்­துடன் மோசடியில் ஈடுபட்ட குற்­றத்­திற்­காக 8 குற்­றச்­சாட்­டு­களும் அவற்­றில் அடங்­கும்.

அதோடு, பொய் கணக்­கு­களை உரு­வாக்­கி­ய­தற்­காக நான்கு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் குற்­ற­ச்செயல் மூலம் கிடைத்த பலன்­க­ளுக்கான மூன்று குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் அவர் எதிர்­நோக்­கு­கி­றார்.

2010ஆம் ஆண்டு மே மாதத்தி­லி­ருந்து 2017ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் வரை, மூன்­றாம் தரப்பு வங்­கிக் கணக்­கு­க­ளுக்கு $8.9 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகை வழங்­கப்­ப­டு­வ­தற்கு 297 பொய் கோரிக்­கை­க­ளைச் செயல்­ப­டுத்த, அவர் ஷாப் நிறு­வனத்தை ஏமாற்­றி­ய­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

முன்­ன­தாக அந்த நிறு­வ­னம் 'ஏஸ் இன்­ஷு­ரன்ஸ்' என்­ற­ழைக்­கப்­பட்­டது.

மூன்­றாம் தரப்பு வங்­கிக் கணக்­கு­க­ளி­லி­ருந்து சுமார் $55,600 சுயாண்­டி­யின் தனிப்­பட்ட வங்­கிக் கணக்­கு­க­ளுக்கு அனுப்­பப்­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­வதாக விசா­ரணை முடி­வு­கள் காட்­டி­ய­தா­கக் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

அந்­நி­று­வ­னத்­தில் தற்­போது பணி­பு­ரி­யாத சுயாண்டி, தாம் வழக்­க­றி­ஞ­ரைக் நிய­மித்­தி­ருப்­ப­தா­க­வும் குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள திட்­ட­மி­டு­வ­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அவர் ஜூலை 14ஆம் தேதி நீதி­மன்­றத்­திற்­குத் திரும்­ப­ வேண்டும்.