கனரக வாகனங்களுக்கான நிறுத்துமிடங்களிலும் தொழில்துறைப் பேட்டை ஒன்றில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்திலும் சிலர் சட்டவிரோதமாக எரிபொருள்களை விற்றிருக்கின்றனர். இதன் தொடர்பில் அறுவருக்கு நீதிமன்றம் செல்லாமல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தின் தொடர்பில் சிங்கப்பூர் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்துள்ளன. நகர மறுசீரமைப்பு ஆணையம் நிர்வகிக்கும் கனரக வாகன நிறுத்துமிடங்களும் அதிகம் கண்காணிக்கப்படவுள்ள இடங்களில் அடங்கும்.
தெம்பனீசில் உள்ள இரண்டு கனரக வாகன நிறுத்துமிடங்களிலும் பயனியர் வட்டாரத்தில் உள்ள தொழில்துறைப் பேட்டை ஒன்றிலும் சட்டவிரோதமாக டீசல் விற்கப்பட்டதாக கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியானது. பேருந்துகளுக்கும் லாரிகளுக்கும் டீசல் விற்கப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட அச்செய்தியில் குறிப்பிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படுவது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அறுவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை என்னவென்பதை அவர்கள் வெளியிடவில்லை.
அவர்கள் தனிநபர்களாக அல்லது நிறுவனங்களா என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
அனுமதி இல்லாத இடங்களில் எரிபொருளை விநியோகிப்பது குற்றமாகும் என்பதை நினைவூட்டும் கடிதத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சென்ற மாதம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பியது.
தீப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் உரிமமின்றி எரிபொருளை விநியோகம் செய்வோருக்கு அதிகபட்சமாக 10,000 வெள்ளி அபராதமும் ஆறு மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
வாகன நிறுத்துமிட சட்டத்தின்கீழும் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம். அதிகபட்சமாக 2,000 வெள்ளி அபராதமும் மூன்று மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

