சென்ற மாதம் 11ஆம் தேதியன்று பூன் லே வட்டாரத்தில் உள்ள வீவக பூளோக் ஒன்றின் 15வது மாடியில் ஒரு தொங்குமேடை அபாயகரமான முறையில் தொங்கியது. அதனால் அதிலிருந்து இரண்டு ஊழியர்கள் அவசரமாக வெளியேற நேரிட்டது.
சம்பந்தப்பட்ட வீவக பூளோக்கின் கூரைச் சுவர் சேதமடைந்திருந்ததால் தொங்குமேடையைத் தாங்கிக் கொண்டிருந்த தொடர்பு வலுவிழுந்துபோனது; அதனால்தான் இந்த அசம்பாவிதம் நேர்ந்ததென முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கட்டட, கட்டுமான ஆணையம் இத்தகவலை வெளியிட்டது.
தொங்குமேடை அபாயகரமான முறையில் தொங்கிக்கொண்டிருந்ததால் அதிலிருந்த ஊழியர்களில் ஒருவர் புளோக்கின் 15வது மாடிக்கு ஏறிச் செல்ல வேண்டியிருந்தது. பின்னர் அவர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரால் மீட்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட மற்றோர் ஊழியர் 14வது மாடியில் இருக்கும் ஒரு வீட்டுக்குள் பாதுகாப்பாக நுழைந்தார்.
பூன் லே டிரைவ் புளோக் 199ல் இச்சம்பவம் நிகழ்ந்தது.

