உலகக் காற்பந்து வரலாற்றில் ஆகச் சிறந்த விளையாட்டாளர்களில் ஒருவராகக் கருதப்படும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிங்கப்பூரில் இருக்கிறார். சிங்கப்பூருக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் இவர்.
இளையர்களுக்கான இரண்டு உபகாரச் சம்பளத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க சிங்கப்பூர் வந்துள்ளார் 38 வயது ரொனால்டோ. சிங்கப்பூர் செல்வந்தர் பீட்டர் அந்த உபகாரச் சம்பளத் திட்டங்களுக்கு நிதி வழங்குகிறார்.
ரொனால்டோவும் பீட்டர் லிம்மும் நீண்டகால நண்பர்கள்.
ரொனால்டோ சிங்கப்பூரில் இருக்கும் இந்தக் காலகட்டத்திற்கு #BeSIUPER வாரயிறுதி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தனது பயணத்தின் ஓர் அங்கமாக ரொனால்டோ நேற்று பூமலைக்குச் சென்றிருந்தார். அங்கு பீட்டர் லிம்மின் பெயர் சூட்டப்பட்ட மரத்தின்கீழ் உபகாரச் சம்பளம் பெறும் 200 பேருடன் படமெடுத்துக்கொண்டார்.
தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் குழுவில் விளையாடுகிறார் ரொனால்டோ.