ஆதிக்க போட்டாபோட்டி சூழலில் தற்காப்பு ஏற்பாடு முக்கியம் என்பதை மறுஉறுதிப்படுத்தின
ஐந்த நாட்டு தற்காப்பு ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த தற்காப்பு அமைச்சர்கள் தங்கள் ராணுவப் பயிற்சிகளின் நிலையை மேம்படுத்த விரும்புகிறார்கள்.
இந்த வட்டாரத்தில் வல்லரசுகளுக்கு இடையில் ஆதிக்க போட்டாபோட்டி அதிகமாகி வரும் சூழலில் தங்களுடைய தற்காப்பு ஏற்பாடு மதிப்புமிக்கதாக தொடர்கிறது என்பதை அவர்கள் மறுஉறுதிப்படுத்தினர்.
சிங்கப்பூரில் நடக்கும் ஷங்ரிலா உச்சநிலை மாநாட்டை ஒட்டி அந்த ஐந்து நாட்டு அமைப்பின் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலியாவின் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், "ஆண்டுதோறும் நடந்துவரும் ஐந்து நாட்டு தற்காப்புப் பயிற்சி ஐந்து நாடுகளின் தற்காப்புப் படைகளுக்கு மிக முக்கியமானதாக இருக்கிறது," என்றார்.
சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்றைய கூட்டத்தை வழி நடத்தினார்.
ஐந்து நாட்டு தற்காப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் ராணுவத் தவைவர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் கிடைத்ததால், ஐந்து நாடுகளின் அமைச்சர்களும் பயிற்சிகளை மேம்படுத்துவது பற்றி விவாதித்ததாக டாக்டர் இங் கூறினார்.
தற்காப்பு ஏற்பாட்டு நாடுகள் சேர்ந்து நல்லபடி இணைந்து செயல்படும் ஆற்றலைப் பலப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் காலக்கிரம முறைப்படி பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
டாக்டர் இங், திரு மார்லஸ் ஆகிய இருவருடன் மலேசியா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த வட்டாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் போட்டாபோட்டி அதிகமாகி வருவதால் வட்டார நிலைப்பாடு பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த டாக்டர் இங், ஐந்து நாட்டு தற்காப்பு ஏற்பாடு என்பது ஓர் உடன்பாடாகவோ ஒரு கூட்டணி அமைப்பாகவோ பெயர் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டினார்.
இதன் காரணமாக அந்த ஏற்பாடு யாருக்கும் மிரட்டலாக இல்லை. எந்தவொரு நாட்டுக்கும் அது எதிரானது அல்ல என்றும் அவர் கூறினார்.
அந்த ஏற்பாடு நிலைப்பாட்டிற்கான ஒரு சக்தியாக தொடர்ந்து இருந்து வரும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பயிற்சியிலும் ஆற்றல்களைப் பலப்படுத்துவதிலும் அதிக உத்திபூர்வ, தற்காப்பு ஒத்துழைப்பு இடம்பெறுவதற்கான வழியாக அந்த ஏற்பாடு திகழலாம் என்று மலேசிய அமைச்சர் முகம்மது ஹசன் யோசனை தெரிவித்தார்.
தற்காப்பு தொழில்துறையைப் பலப்படுத்தவும் ஒத்துழைப்பை அதிகமாக்கவும் தற்காப்பு ஏற்பாட்டு நாடுகளுடன் மலேசியா அணுக்கமாகச் சேர்ந்து செயல்படும் என்றாரவர்.
மலேசியா தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்ளும், கூட்டுப் பயிற்சிகளை நடத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐந்து நாட்டு தற்காப்பு ஏற்பாட்டின் அமைச்சர்கள் ஐவரும் அந்த ஏற்பாட்டிற்கான தங்கள் நாடுகளின் கடப்பாட்டை நேற்று மறுஉறுதிப்படுத்தினர்.
அந்த ஏற்பாடு மூலம் 1971 முதல் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
வட்டாரப் பாதுகாப்பிற்கும் நிலைப்பாட்டிற்கும் உரிய ஆக்ககரமான, அமைதியை நோக்கமாகக் கொண்ட ஓர் ஏற்பாடு என்ற முறையில் அந்த தற்காப்பு ஏற்பாட்டின் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் விவாதித்ததாக தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
இதனிடையே, அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சர், நண்பர்களிடையே மட்டுமன்றி எதிராளிக்கு இடையேயும் தொடர்பு வழி ஏற்பாடுகள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் பதற்றம் கவலை தருவதாக அவர் கூறினார்.

