உலகில் தற்போதுள்ள இயற்கை வனப்பகுதிகளின் பாதுகாப்புநிலையை வலுவாக்குவதும் பூங்கா இணைப்புகளை விரிவுபடுத்துவதும் கிட்டத்தட்ட 1,200 விலங்கினங்களின் இருப்பிடங்களைப் பாதுகாக்க உதவலாம் என்று புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
அழியக்கூடிய நிலையில் உள்ள சுமார் 5,000 விலங்கினங்களில் தற்போது 70% விலங்கினங்களுக்குப் பாதுகாக்கப்படும் வனப்பகுதிகளில் இருப்பிடம் இல்லை அல்லது தரமிறக்கப்பட்ட, குறைக்கப்பட்ட, அரசிதழ் அங்கீகாரத்தை இழந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அந்த விலங்கினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
உள்கட்டமைப்பு தொடர்பான விரிவாக்கம், சுரங்கப் பணி அல்லது மற்ற நடவடிக்கைகளால் காடுகள் அழிக்கப்பட்டு விலங்கினங்களின் வசிப்பிடம் பறிபோகலாம் அல்லது வாழ்வதற்கான தகுதியை இழக்கலாம்.
இதன்படி 2021ஆம் ஆண்டு நிலவரப்படி 278 மில்லியனுக்கும் அதிகமான ஹெக்டர் அளவில் வனப்பகுதிகள் தரமிறக்கப்பட்டுள்ளன, குறைக்கப்பட்டுள்ளன அல்லது அரசிதழ் தகுதியை இழந்துள்ளன என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பிரிட்டனின் டர்ரம் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வேளாண் விரிவாக்கத்திற்காக தென்கிழக்காசிய பகுதியில் சுமார் 1.6 மில்லியன் ஹெக்டர் அளவிலான பூங்காக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இயற்கைச் சூழலில் மட்டுமே வாழக்கூடிய அதாவது செயற்கை முறையில் அமைக்கப்பட்ட சூழலில் வாழச் சிரமப்படும் விலங்கினப் பட்டியலில் உள்ள 5,000 விலங்கினங்களின் மீது ஆய்வாளர்கள் கவனம் செலுத்தினர்.
நேற்று முன்தினம் 'சைன்ஸ் எட்வான்சஸ்' என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வு கண்டுபிடிப்புகளின்வழி தற்போதுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் பல்லுயிர் பாதுகாக்கும் சூழல்களாக இருத்தல் அவசியம் என்பதைச் சுட்டியுள்ளது.
சிங்கப்பூரில் மனித நடவடிக்கை மற்றும் நகரமயமாக்குதலால் ஏற்படக்கூடிய தாக்கத்துக்கு எதிராக இயற்கை வனப்பகுதிகளைப் பாதுகாத்திட, இயற்கைப் பூங்காக்களைக் கொண்ட கட்டமைப்பு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளது. அத்துடன் பசுமைப் பாதைகள் அமைத்து இரு இயற்கைப் பகுதிகளுக்கு இடையிலான இணைப்பை வலுப்படுத்தவும் முனைந்துள்ளது.
இந்நிலையில் 5% நிலம் மட்டுமே சிங்கப்பூரில் பாதுகாக்கப்படும் பகுதியாக உள்ளது. அதில் நான்கு இயற்கை வனப்பகுதிகளும் அடங்கும்.

