சாதாரண நிலைத் தேர்வு முடிவுகள் ஜனவரியில் வெளியாவதற்கு முன்பே சுமார் 5,600 மாணவர்களுக்கு ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகள் ஒன்றில் இடம் கிடைத்துவிட்டது. இது பலதுறைத் தொழிற்கல்லூரியின் ஆரம்பகட்ட சேர்க்கை நடவடிக்கைவழி (இஏஇ) சாத்தியமானது.
மாணவர்களை அவர்களின் ஆர்வம், திறமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் நெகிழ்வுத்தன்மையை இந்த இஏஇ, பலதுறைத் தொழிற்கல்லூரிகளுக்கு வழங்குகிறது. இதனால் கல்விசார்ந்த மதிப்பெண்களைத் தவிர மாணவர்களிடம் இருக்கக்கூடிய பலதரப்பட்ட திறன்களை அடையாளம் காண முடியும். ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பட்டயம் பெற்ற அனுஷ்கா ஷோபி நாராயணன் (படம்), 20, இஏஇ மூலம் பலன் கண்டவர்.
உயிரியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட விரும்பி அவர் உயிர்மருத்துவ அறிவியல் துறையில் பயில விண்ணப்பித்திருந்தார். தனது விருப்பத்தை அறிந்திருந்ததால் தான் தாமதிக்க விரும்பவில்லை என்றும் 'ஓ' நிலைத் தேர்வு முடிவுகளை மட்டும் நம்பி இருக்க வேண்டாம் என்றும் இவ்வாறு முடிவெடுத்தார்.

