இல்லத்திலேயே தங்கி தீவிர நோய்களுக்கு சிகிச்சை பெறு வோர் இனி மருத்துவ பராமரிப்பு செலவுகளுக்கும் தாதிமை சேவைகளுக்கும் தங்களுடைய மெடி சேவ் கணக்கில் இருக்கும் பணத்தைப் பயன்படுத்த முடியும்.
அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து இது நடைமுறைக்கு வருகிறது.
இதனை நேற்று அறிவித்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங், இதன் தொடர்பில் மருத்துவ சேவை வழங்குவோருக்கு தனது அமைச்சு நிதியும் ஆதரவும் வழங்கும் என்றார்.
இதனால் இல்லத் தாதிமை அறநிறுவனம் போன்ற அமைப்புகள் தங்களுடைய நோயாளி களுக்கு வழங்கப்படும் வீட்டுச் சிகிச்சைக்கான செலவுகளுக்கு அவர்களின் மெடிசேவ் கணக்கில் இருந்து நிதியுதவி பெற முடியும். தற்போது மருத்துவ செலவுகளுக்கு மருந்தகங்கள் மெடிசேவுக்கு கோரிக்கை விடுப்பதுபோல இது இருக்கும்.
இந்தத் திட்டம் ஒரு நிலைக்கு வரும்போது இதர இல்ல மருத்துவ, தாதிமை சேவைகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றார் அமைச்சர்.
முதியோர் சாத்தியப்படும் வரை வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவதை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மெடிசேவ் நிதியைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
மருத்துவமனைகளைவிட இல்லத்தில் இருந்து மருத்துவக் கவனிப்புகளைப் பெறுவது உணர்வுபூர்வமாக முதியோருக்கு சிறந்ததாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஐசி எனும் ஒருங்கிணைக்கப்பட்ட சமூகப் பராமரிப்பின் கருத்தரங்கில் நேற்று பேசிய அமைச்சர் ஓங், ஜூலை 1ஆம் தேதியிலிருந்து இல்லப் பராமரிப்பு சேவைகளுக்கான காணொளி மருத்துவ ஆலோசனைகளுக்கும் மானியம், மெடிசேவ் நீட்டிக்கப் படுவதாக அறிவித்தார். இந்த மாற்றத்தின் மூலம் தொலை மருத்துவ சேவைகளுக்கு நிதி உதவி கிடைக்கிறது.
இது, இல்லப் பராமரிப்பு சேவை வழங்குவோருக்கு பேருதவியாக இருக்கும் என்று மூப் படைதல் விவகாரங்ளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஓங் கூறினார்.