தேசிய பூங்காக் கழகம், புக்கிட் பாஞ்சாங்கில் மே மாதம் முதல் எட்டு காட்டுப்பன்றிகளைப் பிடித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை புக்கிட் பாஞ்சாங் ஷெங்ஹுவா இயற்கை பூங்கா அருகே 40 வயதான ஆடவரை காட்டுப்பன்றி தாக்கியது.
இத்தாக்குதலில் அவருக்கு வலது காலில் ஏற்பட்ட காயத்திற்கு 20க்கும் மேற்பட்டத் தையல்கள் போடப்பட்டன.
இச்சம்பவம் குறித்து பேசிய வனவிலங்கு மேலாண்மைக் குழுமத்தின் இயக்குநர் ஏட்ரியன் லூ, நாங்கள் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருக்கிறோம் என்றார்.
மேலும், அந்த இடத்தைத் தொடர்ந்து கண்காணிக்கிறோம். மக்களுடைய பாதுகாப்பிற்காக காட்டுப் பன்றிகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புப் பகுதிகளில் நுழைவதைத் தடுக்க தடுப்பு வேலிகளை அமைத்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
காட்டுப் பன்றிகளுக்கு எப்போது வலை விரிக்கப்பட்டது. இதற்கு முன்பு எத்தனை காட்டுப் பன்றிகள் பிடிக்கப்பட்டன என்பன போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
"வனவிலங்குகளை எப்படிச் சமாளித்து பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்கள், மற்ற அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். வனவிலங்குகளுக்கு உணவளிப்பது சட்டவிரோதமான செயல். அச்செயலை செய்பவர்கள் மீது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது அவற்றின் இயற்கையான உணவுப் பழக்கத்தை மாற்றி, உணவுக்காக மனிதர்களை நாடுவதற்கு வழிவகுக்கும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இதுபோன்று வேறு ஒரு சம்பவம் மே மாதம் 1ஆம் தேதி நடந்துள்ளது. அதில் 34 வயதுப் பெண்ணைக் காட்டுப்பன்றி தாக்கியதில் அவருக்கு பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.
புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர் ஒருவர், "இப்பகுதியில் பன்றிகள் அடிக்கடி காணப்படுகின்றன.
அவை பொதுவாகத் தாக்குவதில்லை, மேலும் பன்றிகளைப் பிடித்து அதைக் கொல்வதற்கு பதிலாக அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு செல்லலாம்," என்று யோசனை கூறினார்.
பன்றியை எதிர்கொள்ளும் போது, மக்கள் முடிந்தவரை அமைதியாக இருந்து, பாதுகாப்பான இடத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து செல்ல வேண்டும். அவற்றைத் தொந்தரவு செய்யவோ, அவற்றிற்கு உணவளிக்கவோ கூடாது. வளர்ந்த காட்டுப் பன்றிகள் இளம் பன்றிக்குட்டிகளுடன் காணப்பட்டால், அவற்றை நெருங்க வேண்டாம்.
அவை தன்னுடைய குட்டி களைப் பாதுகாக்க நம்மை முரட்டுத்தனமாகத் தாக்கக் கூடும். அதைத் தனியே விட்டுவிடுங்கள்," என்றும் திரு ஏட்ரியன் லூ அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் காட்டுப் பன்றி களைக் கண்டால் 1800-4761600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

