சிங்கப்பூரில் கடந்த மாத நில
வரப்படி சில்லறை வர்த்தகம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக அதிகரித்தது. மதுபானம், அழகு சாதனங்கள், குளியலறை மற்றும் கழிவறையில் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவற்றின் விற்பனை ஆக அதிக ஏற்றத்தைக் கண்டன. சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம். இருப்பினும், ஒட்டுமொத்த விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் பதிவான சில்லறை விற்பனை 3.6 விழுக்காடு அதிகரித்தது. கடந்த மார்ச் மாதத்தில் அது 4.5 விழுக்காடு ஏற்றம் கண்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சில்லறை வர்த்தகம் 12.6 விழுக்காடு அதிகரித்தது. இதற்கு சீனப் புத்தாண்டும் ஒரு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்த சில்லறை விற்பனையின் தோராய மதிப்பு $3.9 பில்லியன் என்று புள்ளிவிவரத்துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.
இதில் இணையம் வழி சில்லறை வர்த்தகத்தின் பங்கு 12 விழுக்காடு். கடந்த மார்ச் மாதம் அது 13 விழுக்காடாக இருந்தது.
அனைத்துலகப் பயணம் மீண்டு வருவதாலும் உணவு மற்றும் மதுபான விற்பனை தொடர்ந்து வலிமையுடன் இருப்பதாலும் தொடர்ந்து மூன்றாவது மாதமாக சில்லறை வர்த்தகம் ஏற்றம் கண்டிருப்பதாக டிபிஎஸ் வங்கியைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் சுவா ஹான் டெங் தெரிவித்தார்.
"வெளிநாட்டுச் சுற்றுப்
பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரிக்கும். குறிப்பாக, சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணி
களின் எண்ணிக்கை ஏற்றம் காணும். இது ஒட்டுமொத்த சில்லறை வர்த்தகத்துக்குக் கை
கொடுக்கும் என நம்புகிறோம்.
"இது ஒருபுறம் இருக்க, நிலையற்ற பொருளியல் சூழல் நிலவுவதால் பலர் ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து செலவு செய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வாகனங்கள், மரக்கலன்கள், வீட்டுப் பொருள்கள் ஆகியவற்றுக்கான விற்பனை சரிந்துள்ளது," என்று திரு சுவா கூறினார்.
வாகனங்களின் விற்பனையைச் சேர்க்காமல், சில்லறை வர்த்தகம் கடந்த மாதம் 4.2 விழுக்காடு அதிகரித்தது. கடந்த மார்ச் மாதம் பதிவான 4 விழுக்காடு ஏற்றத்தைவிட இது அதிகம்.
மாத அடிப்படையில், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தின் ஒட்டுமொத்த விற்பனை 0.3 விழுக்காடு அதிகரித்தது.
கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மார்ச் மாதம் பதிவான ஒட்டுமொத்த விற்பனை 2.2 விழுக்காடு அதிகம்.
ஆண்டு அடிப்படையில் கடந்த மாதத்தில் பெரும்பாலான பிரிவுகளின் விற்பனை வளர்ச்சி கண்டது. மதுபான விற்பனை ஆக அதிகமாக ஏற்றம் கண்டது. அதன் விற்பனை 30.5 விழுக்காடு அதிகரித்தது. அதற்கு அடுத்த நிலையில் 16.8 விழுக்காடு அதிகரிப்புடன் அழகு சாதனங்கள், குளியலறை மற்றும் கழிவறையில் பயன்படுத்தப்படும் பொருள்களின் விற்பனை பதிவாகியுள்ளது.
துணிகள், காலணிகள் ஆகியவற்றின் விற்பனை 13 விழுக்காடு அதிகரித்தது.
மாறாக, பெட்ரோல் நிலையங்களில் விற்பனை 14.2 விழுக்காடு சரிந்தது. மரக்கலன்கள், வீட்டுப் பொருள்கள், வாகனங்கள், கணினி, தொலைதொடர்புச் சாதனங்கள் ஆகியவற்றின் விற்பனை 0.1 விழுக்காட்டிலிருந்து 1.2 விழுக்காடு வரை குறைந்தது.

