கரிம வெளியீடற்ற நாடு எனும் இலக்கை எட்ட வேண்டுமெனில் இவை தேவை என்கிறார்
வரும் 2050ஆம் ஆண்டிற்குள் நிகர அளவில் கரிம வெளியீடற்ற நாடு எனும் நிலையை எட்ட நாடுகள் மூன்று அம்சங்களில் சாதித்தாக வேண்டும்.
கரிமக் குறைவுத் தொழில்நுட்பங்களைக் கைக்கொள்ளுதல், பருவநிலை சார்ந்த நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு, அனைத்துலக அளவில் சிறந்த ஒத்துழைப்பு ஆகியவையே அம்மூன்று அம்சங்கள்.
பருவநிலை மாற்றம் ஏற்படுத்தவல்ல பேரழிவு விளைவுகளைத் தவிர்க்கவும் வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியசுக்குக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உலகிற்கு உதவ இந்தக் காலவரிசை மிகவும் முக்கியம் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ வலியுறுத்தியுள்ளார்.
தெமாசெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தொடர்பான 'எக்கோஸ்பெரிட்டி வார' கருத்தரங்கில் அமைச்சர் ஃபூ நேற்று கலந்துகொண்டு இவ்வாறு பேசினார்.
கடல்துறை, விமானத் துறை உள்ளிட்டவற்றில் கரிமம் நிறைந்த புதைபடிம எரிபொருளுக்கு மாற்றாக ஹைட்ரஜனைப் பயன்படுத்தலாம் என்று திருவாட்டி ஃபூ குறிப்பிட்டார்.
2050ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூர் தனது எரிசக்தித் தேவையில் 50 விழுக்காட்டை ஹைட்ரஜனைக் கொண்டு பூர்த்திசெய்ய சிங்கப்பூர் திட்டமிடுகிறது.
பருவநிலை சார்ந்த நடவடிக்கைகளுக்கான நிதித் தேவைகளுக்கு உலக அளவில் அதிக முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஃபூ வலியுறுத்தினார்.
2050ஆம் ஆண்டிற்குள் கரிம வெளியீடற்ற நிலையை எட்ட ஓராண்டிற்கு 9.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$12.4 டிரில்லியன்) பருவநிலை சார்ந்த நடவடிக்கைகளுக்கு முதலிட வேண்டும் என்று அனைத்துலக மேலாண்மை ஆலோசனைக் குழுமமான மெக்கின்சி தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், இப்போது அதற்குக் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குத் தொகை, அதாவது 3.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் குறைவாகச் செலவிடப்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கரிமப் புள்ளி உடன்பாடு தொடர்பில் சிங்கப்பூர்-கானா இடையிலான பேச்சுவார்த்தை நிறைவுபெற்றுவிட்டதாக திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.
கானாவிடமிருந்து கரிமப் புள்ளிகளைப் பெற்று, சிங்கப்பூர் நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் கரிம அளவை ஈடுசெய்ய இந்த உடன்பாடு உதவும்.
பூட்டான், கம்போடியா, கொலம்பியா, வியட்னாம், பெரு போன்ற நாடுகளுடனும் இதுபோன்ற உடன்பாட்டைச் செய்துகொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இது, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலகளவில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான தேவையைக் கோடிட்டுக்காட்டுவதாக உள்ளது என்றும் திருவாட்டி ஃபூ சுட்டினார்.
நாளையுடன் முடிவடையும் மூன்று நாள் 'எக்கோஸ்பெரிட்டி' வாரக் கருத்தரங்கு மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.

