சிங்கப்பூரின் வடபகுதியில் சிட்டி எனர்ஜி, செனோக்கோ எனர்ஜி நிறுவனங்களுக்கு இடையே ஹைட்ரஜன் வாயுவை இறக்குமதி செய்து, விநியோகிப்பது தொடர்பில் தொழில்நுட்ப, வணிக ரீதியிலான சாத்தியம் குறித்து ஆராய அவ்விரு நிறுவனங்களும் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
சிங்கப்பூரில் ஹைட்ரஜன் எரிசக்திக்கான எதிர்கால தேவையைப் பூர்த்திசெய்ய ஏதுவாக, புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜன் உட்பட ஹைட்ரஜன் தொடர்பான வாய்ப்புகளையும் ஆராயப்போவதாக ஒரு கூட்டறிக்கை வாயிலாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டில் தூய எரிசக்தி விநியோகம் குறைவாக இருக்கும் நிலையில், ஹைட்ரஜன் சார்ந்த தொழில்நுட்பங்களின் அறிமுகம் சிங்கப்பூருக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று செனோக்கோ எனர்ஜியின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான எரிக் சுவா கூறினார்.
இரு நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சி தமக்கு நம்பிக்கை அளிப்பதாக எரிசக்திச் சந்தை ஆணையத்தின் துணைத் தலைமை நிர்வாகி திரு ரால்ஃப் ஃபூங் தெரிவித்தார்.
வரும் 2050ஆம் ஆண்டிற்குள் நிகர அளவில் கரியமிலவாயு வெளியேற்றமில்லா நாடு எனும் இலக்கை எட்டும் சிங்கப்பூரின் பயணத்தில் இத்தகைய முயற்சிகள் மிக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிட்டி எனர்ஜி நிறுவனம், பெட்ரோனாஸ் மலேசியாவின் கிளை நிறுவனமான கெந்தாரியுடனும் ஹைட்ரஜன் எரிசக்தி வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. அவ்விரு நிறுவனங்களும் இவ்வாண்டு ஏப்ரலில் ஹைட்ரஜன் சாத்தியக்கூறு ஆய்வுகள் தொடர்பான புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டன.