பங்குச்சந்தைக் கண்காணிப்புப் பட்டியலில் பத்து நிறுவனங்கள்
சிங்கப்பூர்ப் பங்குச்சந்தை (எஸ்ஜிஎக்ஸ்) கண்காணிப்புப் பட்டியலில் பத்து நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
'தம் டிரைவ்' எனும் 'விரலி'யை உருவாக்கிய 'டிரெக் 2000' நிறுவனமும் அவற்றில் ஒன்று.
இவ்வாண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதியிலிருந்து, எஸ்ஜிஎக்ஸ் நிறுவனம், கண்காணிப்புப் பட்டியல் தொடர்பான தனது அரையாண்டு மறுஆய்வை மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து, அண்மைய நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
எஸ்ஜிஎக்ஸ் நிறுவனம், கடந்த 2020, 2021ஆம் ஆண்டுகளுக்கான மறுஆய்வுகளை தற்காலிகமாக நிறுத்திவைத்தது. கொவிட்-19 கிருமிப்பரவல் ஏற்படுத்திய தொழில், பொருளியல் சவால்களையும் நிதிசார்ந்த பிரச்சினைகளையும் நிறுவனங்கள் எதிர்கொள்வதற்காக மறுஆய்வுகள் நிறுத்தப்பட்டதாக எஸ்ஜிஎக்ஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள் கடந்த மூன்று நிதியாண்டுகளில் இழப்புகளைச் சந்தித்துள்ளன.
அடுத்த 36 மாதங்களுக்குள் எஸ்ஜிஎக்ஸ் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து வெளியேறுவதற்கான உரிய தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யாவிட்டால், அந்த நிறுவனங்கள் பங்குச்சந்தைப் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அல்லது அவற்றின் பங்குப் பரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்படும்.
பங்குச்சந்தையில் இடம்பெற கிரீன் லிங்க் மின்னிலக்க வங்கி இலக்கு
சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் கிரீன் லிங்க் மின்னிலக்க வங்கி, வரும் 2027ஆம் ஆண்டிற்குள் சிங்கப்பூர்ப் பங்குச்சந்தையில் இடம்பெறத் திட்டமிட்டுள்ளது என்று அதன் தலைவர் ஜெங் ஜிங் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட அவ்வங்கி இதுவரை கிட்டத்தட்ட $50 மில்லியன் கடன் வாங்கியுள்ளது. வரும் மாதங்களில் அவ்வங்கியிடமிருந்து பெறப்படும் சராசரி கடன் தொகை 200,000 வெள்ளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் ஏறத்தாழ 300 புதிய வாடிக்கையாளர்கள் அவ்வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளனர்.
புதிய, பெரிய அலுவலகத்திற்கு மாற திட்டமிடும் அமெரிக்க நிதி நிறுவனம்
தனது செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக, மோர்கன் ஸ்டேன்லி நிறுவனம் மத்திய வர்த்தக வட்டாரத்தில் பெரிய அலுவலகத்திற்கு மாற இடம் தேடி வருகிறது.
மத்திய வர்த்தக வட்டாரத்தில் கட்டப்பட்டு வரும் ஐஓஐ சென்ட்ரல் பொலிவார்ட் கட்டடங்களில் ஐந்து தளங்களைக் குத்தகைக்கு எடுக்க அந்த அமெரிக்கப் பன்னாட்டு முதலீட்டு வங்கி, நிதிச் சேவைகள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
மோர்கன் ஸ்டேன்லி நிறுவனம் சிங்கப்பூரில் தனது ஊழியரணியை அதிகப்படுத்திவரும் நிலையில், அந்த ஐந்து தளங்களும் ஆயிரம் பேர் பணிபுரியப் போதுமான இடமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியாவில் அந்நிறுவனத்தின் வளர்ச்சி சீராக இருந்து வரும் நிலையில், எதிர்காலத்திலும் அது நீடித்திருக்கும் என நம்புகிறோம் என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் கூறியதாக புளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது.

