ஹேவ்லாக் சாலைக்கு அருகிலுள்ள ஜாலான் மின்யாக் வாடகை குடியிருப்பிலிருந்து மிகவும் மெலிந்த நிலையில் இரண்டு பூனைகள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. அவை கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன. அந்த கூண்டில் மூன்று பூனைகளின் எலும்புக்கூடுகளும் இருந்தன.
தேசிய பூங்காக் கழகத்தின் கீழ் இயங்கும் விலங்கு, கால்நடைப் பிரிவு அந்த இரண்டு பூனைகளை எடுத்துச்சென்றது. தற்போது அவை அதன் பராமரிப்பில் உள்ளன.
கடந்த திங்கட்கிழமை குடியிருப்பாளர் ஒருவர் சாயாங் என்னும் ஃபேஸ்புக் குழுவில் பூனைகளுக்கு உதவி வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். அந்த பதிவைப் பார்த்தவர்கள் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த குடியிருப்பாளர் காவல்துறை, விலங்கு கால்நடைப் பிரிவு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) ஆகியவற்றுக்கும் தகவல் தெரிவித்திருந்தார்.
"நான் செவ்வாய்க்கிழமை மதியம் அங்கு சென்றேன். அந்த வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவரின் மகளிடம் அனுமதி பெற்று வீட்டுக்குள் நுழைந்தேன். என்னுடன் காவல்துறை, வீவக அதிகாரிகளும் இருந்தனர்," என்று பூனைகளை மீட்கும் தன்னார்வலரான 'வாத்தி' என்பவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
மேலும் அவர், "பூனைகள் அந்த பெண்ணுடையது என்பதையும் நாங்கள் அவரிடம் கேட்டு உறுதிசெய்துகொண்டோம். அவை சமையல் அறையில் உள்ள கூண்டில் அடைக்கப்பட்டிருந்தன. உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அவை வெளியே செல்ல அங்கு வழி இல்லை," என்றும் கூறினார்.
அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்த காணொளியில், அந்த பூனைகளைப் பார்க்கும் போது அவை எலும்பும் தோலுமாக இருந்தன. அவை குறைந்தது ஒரு மாதத்திற்காவது உணவும் தண்ணீரும் இல்லாமல் இருந்திருக்கக்கூடும் என்று அனுமானிக்க முடிந்தது.
திருவாட்டி வாத்தி மேலும் கூறுகையில், "நான் இது போன்ற சம்பவங்கள் குறிப்பாக, வாடகை வீடுகளில் நிறையப் பார்த்திருக்கிறேன். வாடகைக்கு இருப்பவர்கள் பூனைகளை அவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியேறும்போது அங்கேயே விட்டு விட்டு செல்கின்றனர்.
"அப்படி விடப்பட்ட பெரும்பாலான பூனைகள் உணவு இல்லாமல், நாங்கள் கண்டுபிடிக்கும்போது அவை எலும்பும் தோலுமாக இருக்கும்," என்றும் கூறினார்.
ஜாலான் மின்யாக்கில் ஒரு வீட்டில் பூனைகள் சரியான பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக தங்களுக்குத் தகவல் வந்தது. அது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு விலங்கு, கால்நடைப் பிரிவின் குழுமத் தலைவர் ஜெசிகா குவாக் பதிலளித்தார்.
"விலங்குகளைப் புறக்கணிப்பவர்களுக்கும் கைவிடுபவர்களுக்கும் எதிராக கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடரக்கூடாது. தங்கள் செல்லப்பிராணிகளைக் கைவிடும் பொறுப்பற்ற உரிமையாளர்களுக்கு எதிரான சட்டம் கடுமையாக இருக்க வேண்டும். தற்போது இருக்கும் சட்டம் மிகவும் கடுமையான தண்டனைகள் வழங்குவதில்லை. உணவு, தண்ணீர் கொடுக்காமல் விலங்குகளைக் கூண்டுகளில் அடைத்து வைப்பது பெரிய குற்றம்," என்றும் கூறினார் திருவாட்டி வாத்தி.
செல்லப்பிராணிகளை கைவிடுபவர்கள் மீது விலங்குகள், பறவைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம்.
முதல்முறை தவறு செய்தால் $10,000 வரை அபராதம், 12 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
2022ஆம் ஆண்டு மட்டும் விலங்கு, கால்நடைப் பிரிவு 310 செல்லப்பிராணிகள் கைவிடப்பட்ட சம்பவங்களை விசாரித்தது. முந்தைய ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது 2022ஆம் ஆண்டு அதிகமான சம்பவங்கள் நடந்துள்ளன," என்று அது விவரித்தது.
"செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் அவற்றின் பராமரிப்பு தரம், தங்குமிடம், உணவு, தண்ணீர் பாதுகாப்பாகவும், பொருத்தமாகவும் இருக்கிறதா என்பதை அடிக்கடி உறுதிசெய்ய வேண்டும்.
"விலங்குகளின் ஆரோக்கியத்தையும் நலனையும் பாதுகாப்பதில் செல்லப்பிராணி உரிமையாளர்கள், அவற்றை விற்பவர்கள், சமூகம் உட்பட அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது," என்றும் திருவாட்டி குவாக் கூறினார்.
செல்லப்பிராணிகளை உரிமையாளர்கள் கைவிடும் சம்பவங்கள் பற்றி தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் www.avs.gov.sg/feedback என்னும் இணையத் தளம் மூலமாகவோ 1800-476-1600 என்ற எண் மூலமாகவோ விலங்குகள் மீட்பு நிலையத்துக்குத் தெரிவிக்கலாம்.

