சிங்கப்பூர் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் செயல்படும் தரவு மையங்களுக்கு அதிக எரிசக்தி தேவைப்படுகிறது. குறிப்பிட்ட வெப்பநிலை வரம்பிற்குள் தளவாடங்கள் செயல்பட ஏதுவாக குளிர்விப்பு அமைப்புகளுக்கும் எரிசக்தியைச் செலவிட வேண்டி உள்ளது.
இந்நிலையில், எரிசக்தியைச் சிக்கனமாகச் செலவிடவும் உயர்வெப்பநிலையில் செயல்படுவதைச் சாத்தியமாக்குவதன்மூலம் பணத்தைச் சேமிக்கவும் தரவு மையங்களுக்கு உதவும் இலக்குடன் புதிய தரநிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, செயல்பாட்டு வெப்பநிலை படிப்படியாக 27 டிகிரி செல்சியசுக்கு அல்லது அதற்குமேல் உயர்த்தப்படலாம். இதன்மூலம் ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்விற்கும் குளிர்விப்பதற்காகச் செலவிடும் எரிசக்தியில் 2% முதல் 5% வரை தரவு மையங்கள் சேமிக்க இயலும்.
அதிக வெப்பமான காலங்களிலும் அதிக ஈரப்பதமுள்ள நிலைகளிலும் தரவு மையங்களின் செயல்பாட்டு வெப்பநிலைகளைப் பாதுகாப்பாக உயர்த்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளைப் புதிய தரநிலை வகுத்துள்ளது.
தொழில்துறை வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகே இப்புதிய தரநிலை உருவாக்கப்பட்டது என்றும் தரவு மையங்களின் மொத்த எரிசக்திப் பயன்பாட்டில் 40% வரை குளிர்விப்பு அமைப்புகளுக்குச் செலவிடப்படுகிறது என்றும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான தரவு மையங்கள் 22 டிகிரி செல்சியசிலும் அதற்கும் குறைந்த வெப்பநிலையிலும் தங்களது தளவாடங்களை இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
வர்த்தக, தொழில் அமைச்சுத் தரவுகளின்படி, நாட்டின் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் கிட்டத்தட்ட 7% தரவு மையங்களுக்குச் செல்கிறது.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் நேற்று நடந்த 'ஏஷியா டெக் - என்டர்பிரைஸ்' கருத்தரங்கில் பங்கேற்று பேசியபோது தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி, இப்புதிய தரநிலை, சிங்கப்பூர் அண்மையில் அறிமுகப்படுத்திய மின்னிலக்கத் தொடர்பு வரைவுத்திட்டத்தின்கீழ் வருகிறது என்று தெரிவித்தார்.
புதிய தரநிலையின்படி செயல்பட்ட ஒரு தரவு மைய நடத்துநர் எரிசக்திச் செலவில் ஓராண்டிற்கு $250,000 சேமித்ததாகவும் இதனையடுத்து, புதிய தரநிலையைப் பயன்படுத்தி, எரிசக்திச் செலவுகளைக் குறைக்குமாறு மேலும் பல தரவு மைய நடத்துநர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

