விலை வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும் அதிகமான வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகள் மே மாதத்தில் கைமாறின.
ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாத வீவக மறுவிற்பனை வீடுகளின் விற்பனை விகிதம் 3.2% கூடி, 2,259 ஆகியது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க, விற்பனை விகிதம் 4.8% கூடியிருந்தது என்று 99.co, எஸ்ஆர்எக்ஸ் சொத்துச் சந்தை தளங்கள் நேற்று தெரிவித்தன.
மறுவிற்பனை சந்தையும் மீட்சி கண்டுள்ளது. வீவக மறுவிற்பனை விலைகள் ஏப்ரலில் 1.1%ஆக இருந்தது. அது மே மாதத்தில் 0.3%ஆக சற்று ஏற்றம் கண்டது. மொத்தத்தில் மே மாத வீட்டு விலைகள் கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க 7.7% வளர்ச்சி கண்டது.
விற்பனை ஏற்றத்துக்கும் மெதுவான விலை ஏற்றத்துக்கும் பல்வேறு காரணங்களை சொல் கிறார்கள் சொத்துச் சந்தை நிபுணர்கள். மே மாத விற்பனை முடிவுகள், 2022 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள், இந்த ஆண்டு விற்பனைக்கு விடப்பட்ட அதிகமான பிடிஓ வீடுகள் ஆகியவை ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக இருக்கலாம் என்றார் Mogul.sg சொத்துச் சந்தை தளத்தின் தலைமை ஆய்வதிகாரி நிக்கலஸ் மாக்.
"ஓரளவுக்கு உயர்ந்துள்ள வீட்டு விலைகள், வீவக மறுவிற்பனை நிலைப்பாடு அடைந்துள்ளதைக் காட்டுகிறது. இருப்பினும், மிக மோசமான பொருளியல் மந்தநிலை ஏற்பட்டாலொழிய மறுவிற்பனை விலைகள் சரியாது என்று கருதுகிறேன்," என்றும் திரு மாக் கூறினார்.
2022, செப்டம்பர் 30ஆம் தேதி முதல், தனியார் வீட்டு உரிமையாளர்கள், 15 மாதங்களுக்குப் பிறகுதான் வீவக மறுவிற்பனை வீட்டை வாங்க முடியும் என்ற புதிய விதி அறிமுகமானதுடன் வீவக வீட்டுக் கடன்களுக்கான தகுதிநிலையும் கடுமையாக்கப்பட்டது.
வீடு வாங்க தகுதியானவர்களுக்கான வீட்டு மானிய உயர்வு இன்னும் அதிகமானோரை சொத்துச் சந்தைக்கு ஈர்த்திருக்கலாம் என்றார் புரோப்நெக்ஸ் நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவுத் தலைவர் வோங் சியூ யிங்.

