புக்கிட் பாத்தோக்கில் சிறுவனிடம் கத்தியைக் காட்டி கொள்ளையடித்ததாகக் கூறப்படும் ஆடவரை தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
முஹமட் நூர் காலிக் அப்துல்லா, 22 மீது நேற்று முறைப்படி ஆயுதக் கொள்ளையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
சென்ற செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் புக்கிட் பாத்தோக் சென்ட்ரலில் கூர்மையான கத்தியைக் காட்டி சிறுவனிடமிருந்து பணப்பை, கைப்பேசி, ஆப்பிள் ஏர்போட்ஸ் ஆகியவற்றை அவர் கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அன்று மாலையே காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்தில் ஜூரோங் காவல் நிலைய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர் காவல்துறையின் படக்கருவிகளில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த அவர்கள், சந்தேக நபரின் அடையாளத்தைக் கண்டுபிடித்தனர்.
ஒரு மணி நேரத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சிறுவனின் பணப்பை, கைப்பேசி ஆகியவை மீட்கப்பட்டன. நூரின் வழக்கு இம்மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆயுதக் கொள்ளை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு இரண்டு ஆண்டு முதல் பத்து ஆண்டு வரை சிறைத் தண்டனையும் குறைந்தது 12 பிரம்படிகளும் விதிக்கப் படலாம்.