சிங்கப்பூரரான 40 வயது எம்ஜே இயர்ன் ஜோஸுக்கு 'வேட்' வரி மோசடியில் ஈடுபட்டதற்காக சிறை, அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த விலையுயர்ந்த பொருளை ஜிஎஸ்டி விதிமுறைப்படி தெரிவிக்காததால் அச்சட்டத்தின் கீழ் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்று சிங்கப்பூர் காவல் படையும் சுங்கவரித் துறையும் கூட்டாக தெரிவித்தன. மே மாதம், 24ஆம் தேதி அவருக்கு $6,000 அபராதமும், நான்கு மாதங்கள் இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜோஸ் மற்றும் வேறு சிலரை லண்டனுக்கு அனுப்பி போலி நகைகளை வாங்கி அதற்கான வேட் வரிக்கு கோரிக்கை விடுப்பதற்காக சிங்கப்பூரரான ஆலன் இயோ அவர்களை பணியில் அமர்த்தியிருந்தார்.
அதன்படி ஜோஸ் போலி நகையை வாங்கி அதற் கான 30,940 யூரோ (S$44,650) வேட் வரியை திரும்பப் பெறுவதற்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஜோஸ் லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு கொண்டு வந்த நகைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்காததோடு அதற்கான ஜிஎஸ்டி வரியைக் கட்டவில்லை. இதற்காக 2022ஆம் ஆண்டு டிசம்பரில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அடுத்த நாள் ஜோஸ், இயோ உட்பட இந்த மோசடியில் தொடர்புடைய நான்கு பேரையும் காவல்துறை கைது செய்தது. இயோவுக்கும் ஜோஸ் உடன் இணைந்து இந்த வேட் வரி மோசடியில் ஈடுபட்டதற்காக $6,000 அபராதமும் 37 மாதங்கள் சிறைத் தண்டனையும் ஏப்ரல் 14ஆம் தேதி விதிக்கப்பட்டது.