அரசதந்திரம் மேலும் சிக்கலான ஒன்றாக உருவெடுப்பு: அதிபர் ஹலிமா
தன்னைப்பேணித்தனம், தேசியவாத உணர்வு போன்றவை அதிகரித்துவரும் சூழலில், அரசதந்திரம் என்பது இப்போது மேலும் சிக்கலான ஒன்றாக உருவெடுத்து உள்ளதாக அதிபர் ஹலிமா யாக்கோப் (படம்) கூறியுள்ளார்.
எதிர்வரும் காலத்திற்கு புறச் சூழல் தொடர்ந்து நிச்சயமற்றதாக இருக்கும் வேளையில், ஒரு தேசமாக சிங்கப்பூரின் ஐக்கியமும் ஒன்றுபட்டு நிற்க அது கொண்டிருக்கும் உறுதியும் மேலும் முக்கியமானதாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வெளியுறவு அமைச்சு நேற்று ஏற்பாடு செய்த 13வது எஸ்.ராஜரத்னம் விரைவுரை நிகழ்ச்சியில் பேசிய திருவாட்டி ஹலிமா, கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பல நாடுகளும் தயாராக இல்லாததைச் சுட்டினார்.
"அடுத்த பெருந்தொற்று எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அத்தகைய உலகளாவிய பிரச்சினைகளைக் கையாள பலதரப்பு ஒத்துழைப்பே ஒரேவழி என்பதை கொவிட்-19லிருந்து நாம் கற்றுக்கொண்டோம்," என்றார் அவர்.
"நிச்சயமற்ற புறச் சூழலை எதிர்கொள்ள மீள்திறனையும் சமுதாயத்தில் நம்பிக்கையையும் வலுப்படுத்துவது உதவும்," என்றும் திருவாட்டி ஹலிமா சொன்னார்.
எனினும், சிங்கப்பூர் சமுதாயம் முதிர்ச்சி அடைந்துவரும் வேளையில் மக்களுடைய விருப்பங்கள் வேறுபடுவதால் இது சவாலாக இருக்கும் என்றார் அவர்.
ஒரு நாடாக மீள்திறனை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அவர் கோடிட்டுக் காட்டினார். நியாயமான, அனைவரையும் உள்ளடக்கும் சமுதாயத்தை நோக்கிச் செயல்படுவது, கல்வியிலும் திறன் பயிற்சியிலும் முதலீடு செய்வது, சோதித்துப் பார்க்கும் சூழலை ஏற்படுத்தித் தருவது, வலுவான சமூக உணர்வைக் கொண்டிருப்பது உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
புதிய வாய்ப்புகளையும் பங்காளித்துவங்களையும் கைப்பற்ற தொடர்ந்து திறந்த மனதுடன் இருக்கும்படி திருவாட்டி ஹலிமா கேட்டுக்கொண்டார். மத்திய ஆசியா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு, தெற்காசியா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகள் அசுர வளர்ச்சி கண்டுள்ளன என்று சொன்ன அவர், இதைப் பயன்படுத்திக்கொள்ள சிங்கப்பூருக்கு இதுவே உரிய தருணம் என்றார்.

