கார்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு சிங்கப்பூர் பயனீட்டாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேக வரம்பை மீறி கார் ஓட்டியதாகவும் பழுதுபார்ப்புப் பணிகளுக்கான கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறி தங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட வைப்புத்தொகையை பிரஸ்டீஜ் கார்ஸ் ரென்டல் நிறுவனம் திருப்பிக் கொடுக்கவில்லை என்று பலர் புகார் செய்திருப்பதாக சங்கம் கூறியது.
போக்குவரத்து காவல்துறை அல்லது நிலப் போக்குவரத்து ஆணையம் தங்களுக்கு அபராதம் விதிக்காதபோதிலும் நோட்டீஸ் அனுப்பிவைக்காதபோதிலும் பிரஸ்டீஜ் கார்ஸ் ரென்டல் நிறுவனம் வைப்புத்தொகையைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று வாடிக்கையாளர்கள் குறைகூறியிருப்பதாக சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் நேற்று தெரிவித்தார்.
வேக வரம்பை மீறியதற்கான ஆதாரங்களைத் தங்களிடம் நிறுவனம் முன்வைக்கவில்லை என்று வாடிக்கையாளர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. மாறாக, நிறுவனத்தின் கார்களில் பொருத்தியுள்ள ஜிபிஎஸ் சாதனங்களிலிருந்து பெறப்பட்ட பதிவுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள தொகையை வசூலிக்க கடன் வசூலிப்பவர்களை நிறுவனம் பயன்படுத்தியதாகவும் வாடிக்கையாளர்கள் சிலர் கூறினர். 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதியிலிருந்து கடந்த திங்கட்கிழமை வரை பிரஸ்டீஜ் கார்ஸ் ரென்டல் நிறுவனத்துக்கு எதிராக சங்கத்திடம் 23 புகார்கள் செய்யப்பட்டதாக திரு யோங் தெரிவித்தார். $1,000லிருந்து $2,500 வரையிலான வைப்புத்தொகைணை நிறுவனம் தங்களிடம் திருப்பிக் கொடுக்கவில்லை என்று வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்ததாக அவர் கூறினார்.

